சீர்காழியில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (நவம்பர் 13) மாலை சென்னையில் இருந்து சீர்காழிக்கு புறப்பட்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வரலாறு காணாத மழை பெய்திருக்கிறது. இதனால் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
பல வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. பல இடங்களில் மரங்கள் முறிந்தும், மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதால் போக்குவரத்து மற்றும் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத மழை பெய்துள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
மக்களின் இயல்பு முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை (நவம்பர் 14) நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாக இன்று காலை தெரிவித்திருந்தார்.
சீர்காழி செல்வதற்காக இன்று இரவு 7 மணியளவில் சென்னையிலிருந்து சாலை மார்க்கமாக முதலமைச்சர் சீர்காழி புறப்பட்டுள்ளார்.
இன்று இரவு புதுச்சேரியில் தங்கிவிட்டு நாளை காலை கடலூர், சிதம்பரத்தில் ஆய்வு செய்து விட்டு சீர்காழிக்கு செல்கிறார். அங்கே அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்கிறார். ஏற்கனவே மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று சீர்காழி சென்று அங்கே மின் விநியோக பணிகளை வேகப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
மோனிஷா
மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி: புயலாக மாறுமா?
பன்னீர் விவகாரம்: எடப்பாடியிடம் அமித் ஷா போனில் பேசிய விவரம்!