“நான் ஓரளவுக்கு பேச காரணமே பீட்டர் அல்போன்ஸ்தான்”: மு.க.ஸ்டாலின்

தமிழகம்

பேச்சாளர்கள் தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் கிடைத்த பரிசு என்று மாநில அளவில் பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

கலைஞர் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு அரசு ஏராளமான நிகழ்வுகள் மூலம் கொண்டாடி வருகிறது. அந்த வகையில் மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது.

இந்த பேச்சு போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா இன்று (ஆகஸ்ட் 23) நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.

பின்னர் விழாவில்  பேசிய முதல்வர், “எப்போதும் என்னை சுறுசுறுப்பாக வைத்திருக்கக்கூடிய, ஊக்கம் தரக்கூடிய வகையில் என்னை இயக்கிக் கொண்டிருக்கக் கூடியவர்கள் யார் என்று கேட்டால், மாணவர்களும், இளைஞர்களும்தான். எனவே, அப்படிப்பட்ட மாணவ மாணவியர்கள் நிரம்பியிருக்கக்கூடிய இந்த நிகழ்ச்சியில், உங்களிடையே இருப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

“தலை நிமிரும் தமிழகம்” என்ற என்னுடைய தமிழ்நாட்டின் விடியலுக்கான முழக்கத்தை, கல்லூரி மாணவர்களிடம் கொண்டு போய் சேர்க்கவேண்டும். அந்த அடிப்படையில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தைச் சார்ந்த சகோதரர்கள், நிர்வாகிகள் இந்தப் பேச்சுப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி, அதில் மாநில அளவில் வெற்றி பெற்றிருக்கக்கூடிய மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கியிருக்கிறோம்.

ஆனால், என்னைக் கேட்டால், இந்த பேச்சுப் போட்டிகளின் மூலமாக அடையாளம் காணப்பட்டுள்ள இளம் பேச்சாளர்களைத்தான், தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் கிடைத்த பெரும் பரிசு என்றுதான் நான் சொல்லுவேன்.

ஏனென்றால், பேச்சுக்கலை என்பது எல்லோருக்கும் எளிய வகையில் வந்துவிட முடியாது. மேடைகளில் பேசுபவர்கள் தங்களுக்கெனத் தனி பாணியை உருவாக்கிக் கொண்டு, அதற்கென ரசிகர்களை ஈர்த்தவர்கள் எத்தனையோ பேர், நம் தமிழ் மண்ணில் இருந்தார்கள். இன்றைக்கும் இருக்கிறார்கள்.

பேச்சாற்றலால் நம் தமிழ் நிலம் பண்படுத்தப்பட்ட வரலாற்றை நீங்கள் எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டும். அதனை எல்லோருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும். டி.எம்.நாயர் அவர்களின் ‘ஸ்பர்டாங்க்’ உரைபோல், உங்களது உரைகள் வருங்காலங்களில் பலருக்கும் கையேடாக இருந்துவிட வேண்டும்.

பகுத்தறிவுக் கருத்துகளை பட்டெனச் சொல்லும் நம்முடைய ஈரோட்டுச் சிங்கம் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், அவர் இந்த சமுதாயத்திற்காக என்னென்ன கருத்துக்களை எல்லாம் எடுத்துச் சொல்லியிருக்கிறார் என்பது இதன் மூலமாக நாம் அறிந்து கொண்டாகவேண்டும். அதேபோல், உலக அரசியலையெல்லாம் தன் மயக்கும் மொழியாலேயே சொல்லி அறிவூட்டியவர் யார் என்றால், பேரறிஞர் பெருந்தகை அண்ணா. அடுக்குமொழியிலும் கனல் தெறிக்கக்கூடிய வசனங்கள் பேசி தமிழர்களுக்கு உணர்ச்சியை ஊட்டியவர் யார் என்றால், இன்றைக்கு நூற்றாண்டு விழா காணக்கூடிய தலைவர் கலைஞர். இப்படி அவர்களை எல்லாம் வழிகாட்டிகளாகக் கொண்டு நம்முடைய ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று நான் இந்த நேரத்தில் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

வரலாறு போற்றும் பேச்சாளர்களை உருவாக்கித் தரும் களமாக, இந்த போட்டியை மிகச் சிறப்பாக நடத்தியிருக்கிறார்கள். அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கக்கூடிய சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், அந்தப் பணியை சிறப்போடு செய்து காட்டியிருக்கிறார்கள்.

அதேபோல, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த நேரத்தில் என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இப்படி இளம் பேச்சாளர்களைக் கண்டறிந்து, ஊக்குவிக்கும் அந்தப் பணியை பீட்டர் அல்போன்ஸ் செய்திருக்கிறார். நான் நினைத்துப் பார்க்கிறேன், இப்போது மட்டும் கலைஞர் இருந்து இந்தக் காட்சியைப் பார்த்திருந்தால் அவரைவிட மகிழ்ச்சி அடையக்கூடியவர்கள் யாரும் இருக்க முடியாது. நாமெல்லாம், ஆற்றலோடு அல்ல, ஏதோ ஓரளவுக்கு பேசக்கூடிய ஒரு வாய்ப்பு எனக்கு வந்திருக்கிறது என்றால், அதற்கெல்லாம் காரணம் எத்தனையோ பேர் இருக்கலாம். அதில் முக்கிய காரணமாக இருந்தவர் யார் என்று கேட்டால், பீட்டர் அல்போன்ஸ் தான்.

சட்டமன்றத்தில், அதேபோல மக்கள் மன்றத்தில் பேசக்கூடிய பேச்சுக்களை எல்லாம் நான் கேட்பதுண்டு. அவரே பலமுறை என்னிடத்தில் சட்டமன்றத்தில் சொல்லியிருக்கிறார். அமைதியாக உட்கார்ந்துகொண்டு இருக்கக்கூடாது. எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் சரி, ஆளும்கட்சியாக இருக்கும்போதும் சரி, சட்டமன்றத்தில் அப்போதைக்கப்போது எழுந்து சில கேள்வியைக் கேட்கவேண்டும். எனக்கு இப்படிப்பட்ட பல அறிவுரைகளை ஆலோசனைகளை எல்லாம் வழங்கியவர் பீட்டர் அல்போன்ஸ்.

அதேபோல, செஞ்சி மஸ்தானை பொறுத்தவரையில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சராக அவர் ஆற்றி வரும் பணிகளையெல்லாம் நீங்கள் நன்கு அறிவீர்கள். திமுக அரசு எப்போது ஆட்சிப் பொறுப்பேற்கிறதோ, அப்போதெல்லாம் சிறுபான்மையினர் நலனுக்காக போராடக்கூடிய, வாதாடக்கூடிய, சாதனைகளை தீட்டக்கூடிய பல்வேறு பணிகளை நிறைவேற்றி தந்திருக்கிறது என்பதெல்லாம் ஒரு மிகப் பெரிய வரலாறு.

இப்படி சிறுபான்மையினர் நலன் காக்கும் ஏராளமான திட்டங்களை நம்முடைய அரசின் மூலமாக நாம் தொடர்ந்து செய்து வருகிறோம். சிறுபான்மையினர் உரிமைகளைக் காக்க மக்கள் மன்றத்திலும் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து செயலாற்றிடும் என்ற உறுதியை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொண்டு, அதேநேரத்தில் மாணவர்களிடம் நான் வேண்டுகோளாக வைப்பதெல்லாம், நம்முடைய தமிழ்நாட்டுக்கு என்று தனி குணம் உண்டு. சமத்துவம் – சகோதரத்துவம் – சமூகநீதி -சுயமரியாதை – பகுத்தறிவு என்று பண்பட்ட பண்பாட்டைக் கொண்ட நம் தமிழ் மண்ணின் உணர்வை நீங்கள் அனைவரும் பெற வேண்டும். ஒற்றுமையோடு வேற்றுமை இல்லாத தமிழ்நாட்டை நோக்கி நமது சமூகத்தை வழிநடத்த வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்” என்று பேசினார்.

மோனிஷா

துபாய் இளவரசியைக் கடத்த உதவியதா இந்தியா?

சந்திரயான்-3: இஸ்ரோ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *