திருப்பூரில் நாளை சிபிஐ 25-வது மாநில மாநாடு தொடங்குகிறது. 4 நாட்கள் வரை நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்,
“மதசார்பின்மையை வலியுறுத்தி பொது மாநாடு நடைபெறவுள்ளது. இதற்கு மூத்த தலைவர் நல்லக்கண்ணு அவர்கள் தலைமை தாங்குவார்கள். அந்த மாநாட்டில் திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொது செயலாளர் வைகோ, ஆசிரியர் வீரமணி உட்பட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைவர்கள் கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர்.
இந்த மாநாடானது மாலை 4 மணிக்கு தொடங்கி 7 மணி வரை நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் சிபிஐ பிரதிநிதிகளின் மாநாடு நடைபெறும்.
இந்த மாநாடு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநாடு. நாட்டில் நிலவுகிற அரசியல் நிலைமைகள் குறிப்பாக ஒன்றிய அரசு பின்பற்றக்கூடிய மக்கள் விரோத கொள்கைகள் மற்றும் மக்கள் சந்திக்கக்கூடிய வாழ்வாதார பிரச்னைகள் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. மாநாடு நிறைவு நாளில் மாநாட்டின் முகப்பில் தேசிய கொடி ஏற்றப்படும் மக்கள் விரோத மோடி அரசே வெளியேறு என்ற முழக்கத்தை முன்வைத்து மாநாட்டின் ஒரு பகுதியாக பத்தாயிரம் பேர் கொண்ட செந்தொண்டர் படை அணிவகுப்பு நடைபெறும் என அவர் தெரிவித்தார்.
மேலும் முத்தரசன், ”2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவிற்கு எதிராக மத சார்பற்ற கூட்டணி வலுவாக உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கியுள்ளது. இந்தியாவில் 20 கோடி மக்கள் இரவு உணவு இல்லாமலும் , லட்சக்கணக்கான மக்கள் சாலையோரங்களில் வசித்து வரக்கூடிய நிலையில் பிரதமர் மோடி எவ்வாறு நாடு வளர்ச்சி அடைந்து வருவதாக தெரிவிக்கிறார் எனத் தெரியவில்லை” என்று கூறினார்.
திமுகவின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தங்கள் கூட்டணியின் தலைவரான முதல்வர் ஸ்டாலினை சந்திக்க முடியவில்லை என்று வருத்தத்தில் இருந்தனர். மேலும் திமுக ஆட்சி அமைத்த பிறகு கூட்டணிக் கட்சித் தலைவர்களை அழைத்து அரசியல் ரீதியாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்திடவில்லை. இந்த நிலையில் திமுக கூட்டணியின் அனைத்துத் தலைவர்களையும் ஒன்று சேர்க்கும் ஓர் திருப்பு முனையாக திருப்பூர் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாடு அமைந்திருக்கும் என்கிறார்கள் தோழர்கள்.
க.சீனிவாசன்
ஹிட்லர் வென்ற கதை தெரியாதா? மோடி மீது ராகுல் விமர்சனம்