மறைந்த தமிழறிஞர் அவ்வை நடராஜன் உடலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவம்பர் 22) அஞ்சலி செலுத்தினார்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழறிஞர் அவ்வை நடராஜன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 87.
அவ்வை நடராஜன் 1936-ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் பிறந்தார். அவருடைய தந்தை போலவே தமிழ் மீது இருந்த பற்றின் காரணமாக சிறு வயது முதலே தமிழ் கற்க ஆரம்பித்தார்.
பின்னர் மதுரை தியாகராசர் கல்லூரி, தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றினார்.
செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் அவ்வை நடராஜன் பணியாற்றினார். தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் கலாச்சாரத்திற்காக அவரது பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் 2011-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகவும், பாரத் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் பணியாற்றி உள்ளார். தமிழுக்காக அவர் ஆற்றிய தொண்டிற்காக கலைமாமணி விருது வழங்கப்பட்டது.
சென்னை அண்ணா நகரில் வைக்கப்பட்டுள்ள அவ்வை நடராஜன் உடலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, ஜெகத்ரட்சகன் மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த தமிழறிஞர் அவ்வை நடராஜன் உடலுக்கு தமிழறிஞர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அவ்வை நடராஜன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
செல்வம்
முன்னாள் முதல்வரின் கடைசித் தேர்தல்: விமர்சித்த இந்நாள் முதல்வர்
உலகக்கோப்பை: ஈரானை வீழ்த்தி சாதனை படைத்த இங்கிலாந்து