சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்டோபர் 8) நேரில் சென்று ஆய்வு செய்தார்.
வடகிழக்கு பருவமழை இன்னும் இரண்டு வாரங்களில் துவங்க இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், சென்னை மாநகரில் பருவமழை காலங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்க்கவும், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளவும் நகரின் பல்வேறு இடங்களில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக 179 கி.மீ தொலைவிற்கு முதற்கட்டமாக மழைநீர் வடிகால் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த குறிப்பிட்ட பணிகள் மட்டும் 90 சதவிகிதம் முடிக்கப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் அமைக்கும் இறுதிகட்ட பணிகளை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
முதலாவதாக, சென்னை சென்ட்ரல் பகுதியில் உள்ள என்எஸ்சி போஸ் சாலையில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து வால்டாக்ஸ் சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் மழைநீர் வடிகால் பணிகள், கொளத்தூர் மற்றும் திரு.வி.க நகர் பகுதியில் நடைபெற்றும் வரும் பணிகளையும் ஆய்வு செய்ய உள்ளார்.
இந்த ஆய்வின் போது, மீதமுள்ள 10 சதவிகித பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஆய்வின் போது, நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டவர்கள் முதலமைச்சருடன் இருந்தனர்.
செல்வம்
மருந்து தட்டுப்பாடு இல்லை: அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்
பிசிசிஐ தலைவர் போட்டியில் ரோஜர் பின்னி..? பின்னணி என்ன?