கீழடி அருங்காட்சியகம்: திறந்து வைத்து பார்வையிட்டார் முதலமைச்சர்
கீழடி அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட தொல் பொருட்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (மார்ச் 5) திறந்து வைத்தார்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் சுமார் 2 ஏக்கர் பரப்பில் ரூ.18.43 கோடி செலவில், தொன்மைப் பொக்கிஷமாக, தமிழர் பெருமை பேசும் வகையில் அற்புதமான பல்வேறு அம்சங்கள் பெற்று அமைக்கப்பட்டுள்ளது கீழடி அருங்காட்சியகம்.
தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை கீழடி அகழாய்வுத் தளத்தில் 2018ம் ஆண்டு முதல் தொடர்ந்து தற்போது வரை ஐந்து கட்டங்களாக அகழாய்வு மேற்கொண்டு வருகிறது. முன்னதாக ஒன்றிய அரசின் 3 கட்ட ஆய்வும் நடத்தப்பட்டது.
அகழாய்வுகள் மூலம் கீழடியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட 4,429 மணிகள், 601 வட்டச் சில்லுகள், 89 ஆட்டக்காய்கள் உள்ளிட்ட தொல் பொருட்கள் உலகத் தமிழர்கள், பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில்,
2 ஏக்கர் நிலப்பரப்பில் 31 ஆயிரம் சதுர அடிப் பரப்பளவில், ரூ.18 கோடியே 43 லட்சம் செலவில், தமிழக மரபுசார் கட்டடக்கலை அடிப்படையில், கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், கொந்தகை, அகரம், மணலூரில் நடந்த அகழ்வாய்வில் கிடைத்த பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 5) திறந்து வைத்தார். பின்னர் அருங்காட்சியகத்தைச் சுற்றி வந்து பார்வையிட்டார்.
இந்த கீழடி அருங்காட்சியகத்தில் மதுரையும் கீழடியும், வேளாண்மையும் நீர் மேலாண்மையும், கலம் செய்கோ, ஆடையும் அணிகலன்களும்,
கடல்வழி வணிகம், வாழ்வியல் எனும் 6 பொருண்மைகள் அடிப்படையில் தனித்தனி கட்டடங்களில் தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழர்களின் தொன்மை, பண்பாடு, நாகரிகம், கல்வியறிவு, எழுத்தறிவு, உலகின் பல்வேறு பகுதிகளுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பு ஆகியவற்றினை பறைசாற்றும் வகையிலும், வெளிக்கொணரும் வகையிலும், உலகத் தமிழர்கள் பெருமை கொள்ளும் வகையிலும், கீழடி அருங்காட்சியகம் அமையப்பெற்றுள்ளது.
மோனிஷா
ஜாக்டோ ஜியோ போராட்டம்: முதல்வர் வாக்குறுதி!
தெருநாய் தொல்லை: தீர்வு கூறி சர்ச்சையில் சிக்கிய எம்.எல்.ஏ