திமுக அரசு மீது சிலர் மதத்தை வைத்து குற்றம் சுமத்துகிறார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை, திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவிலில் 31 இணையர்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை சார்பில் திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிசம்பர் 4) நடத்தி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் , “நேற்று முழுவதும் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் சூறாவளி சுற்றுப்பயணத்தை முடித்து இரவோடு இரவாக வந்து தூங்கிவிட்டு காலையில் உடனடியாக இங்கு புறப்பட்டு வந்திருக்கிறேன்
நேற்று ஏற்பட்ட களைப்புகள் எல்லாம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் என்னை விட்டு நீங்கி உள்ளது.
சேகர் பாபு ஒரு செயல் பாபு என்று நான் பலமுறை கூறியிருக்கிறேன். அவரும் அதனை தொடர்ந்து நிரூபித்துக்கொண்டிருக்கிறார். இன்னும் கூட வெளிப்படையாக கூற வேண்டும் என்றால், ஒரு முதலமைச்சர் தான் அமைச்சர்களை வேலை வாங்குவார்கள். ஆனால் அமைச்சர் சேகர் பாபு முதலமைச்சரை வேலை வாங்கக்கூடியவராக இருக்கிறார்.
உலக வரலாற்றிலேயே இந்து சமய அறநிலையத்துறையில் இல்லாத அளவிற்கு சேகர் பாபு சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.
அறநிலையத்துறை சார்பில் 47 கோவில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை உரிமையை நாம் மீட்டு தந்துள்ளோம். 3700 கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டிருக்கிறோம்.
அனைத்திற்கும் மேலாக ஈரோட்டு சிங்கம் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை நீக்கக்கூடிய வகையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் நியமனங்களை செய்து முடித்திருக்கிறோம்.
இதனால் சமத்துவத்தை விரும்பாத சில சக்திகள் மூலமாக அனைத்து சாதியினரும் அர்ச்சகர் நியமனத்திற்கு எத்தனை தடைகள் வந்தாலும் அதற்கான சட்டப்போராட்டத்தை நாம் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறோம். கோயில்கள் என்பது மக்களுக்கானது. சிலரது தனிப்பட்ட சொத்துக்கள் கிடையாது.
அறநிலையத்துறையின் செயல்பாடுகளை குறிப்பிட்ட சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால் தான் சேற்றை வாரி இறைக்கிறார்கள். பொய் பித்தலாட்டத்தை அவர்கள் தொடர்ந்து பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
அரசியல் செய்வதற்கு அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. மதத்தை வைத்து நம் மீது பல பழிகளையும் குற்றங்களையும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கான எந்த ஆதாரமும் அவர்களிடம் கிடையாது.
நம்மை பொறுத்தவரைக்கும் நாம் அண்ணா வழியில் ஏழையின் சிரிப்பில் இறைவனை காணக்கூடியவர்கள். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்ற நிலையிலே நாம் நமது பணியை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோம். அதனடிப்படையில் தான் தமிழ்நாடு முழுவதும் இன்று 217 பேருக்கு அறநிலையத்துறை சார்பில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது.” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
செல்வம்