2023 ஆம் ஆண்டு தமிழ்நாட்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்குள் கடந்த நிதியாண்டின் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தை நேற்று (பிப்ரவரி 1) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேலூரில் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் இன்று (பிப்ரவரி 2) வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “முதலமைச்சர் பொறுப்பேற்றுள்ள நான் உட்பட அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், பல்வேறு துறைகளின் முதன்மை செயலாளர்கள், அரசு செயலாளர்கள், பல்வேறு துறைகளைச் சார்ந்து இருக்கக்கூடிய அதிகாரிகள் நேற்று (பிப்ரவரி 1) 4 மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று தங்களது துறை சார்பான ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.
அதன் அடிப்படையில் இந்த ஆய்வுக் கூட்டத்தில் பல பணிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இந்த கூட்டம் குறைகளைக் கண்டுபிடிப்பதற்காக நடத்தும் கூட்டம் அல்ல. மக்களுடைய பணி சிறக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு தான் இந்த கூட்டத்தைக் கூட்டியுள்ளோம்.
சுணக்கம் காணக்கூடிய சில பணிகள் இந்த கூட்டத்தில் அடையாளம் காணப்பட்டது.
நிர்வாகம் நல்ல வகையில் மேம்பட வேண்டும். நமது பணிகளில் காணக்கூடிய இடறுகளைக் குறைத்து அதற்குரிய நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்.
உங்களை உற்சாகப்படுத்துவதற்கும், உங்கள் பிரச்சனைகளை நேரடியாக அறிவதற்குத் தான் இந்த ஆய்வுக் கூட்டம். உங்களுடைய கருத்துக்கள் அனைத்தும் அரசின் கவனத்தில் நிச்சயமாக ஏற்றுக் கொள்ளப்படும்.
இந்த ஆய்வின் போது குடிநீர் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், வருவாய்த் துறை வழங்கக் கூடிய பட்டா மாறுதல் சேவைகள், ஊரக மேம்பாடு விளிம்பு நிலை மக்களின் நலன், நகர்ப்புற வளர்ச்சி, சாலை மேம்பாடு, வாழ்வாதாரத்தை உயர்த்துதல், இளைஞர் திறன் மேம்பாடு, புதுக்கட்டமைப்பு வசதிகள், கல்வி, மருத்துவம், குழந்தைகள் ஊட்டச்சத்து போன்ற முக்கிய துறைகளின் செயல்பாடுகள் குறித்தும், அதன் பயன் பொதுமக்களுக்கு முழுமையாகச் சென்றடைவது குறித்தும் நாம் ஆய்வு மேற்கொண்டுள்ளோம்.
இந்த துறைகள் சார்பாக அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் எந்த அளவிற்குச் செயலாக்கம் பெற்றுள்ளன என்று நாம் ஆய்வு செய்துள்ளோம். இந்த களப்பணி மற்றும் ஆய்வுக் கூட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு துறைத் தலைவர்களும், அரசு செயலாளர்களும் உரியத் தொடர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
திட்டச் செயலாக்கத்தில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் அதற்கான திருத்து ஆணை வெளியிடலாம். நிதி தேவை மற்றும் பணியாளர் பற்றாக்குறை இருந்தால், அதைச் சரிசெய்வதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பட்டா மாறுதல், சான்றிதழ் பெறுதல், அரசு நலத்திட்டங்களில் பயன் அடைதல் ஆகியவை எளிமையாக நடைபெற வேண்டும். மக்கள் இதற்காக சில இடங்களில் அலையவைக்கப்படுகிறார்கள் என்ற தகவலும் வருகின்றது. இதனை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணித்துத் தடுக்க வேண்டும்.
அனைத்து துறை வளர்ச்சி என்ற இலக்கோடு தான் நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அத்தகைய சிந்தனையோடு தான் திட்டங்களைத் தீட்டி வருகிறோம். தமிழ்நாடு மக்களுக்கு அளித்திருக்கக்கூடிய வாக்குறுதிகளை முதற்கட்ட அடிப்படையாக வைத்து திட்டங்களைத் தீட்ட வேண்டும்.
அடுத்தகட்டமாக அமைச்சர்கள், செயலாளர்கள் உடன் கலந்துரையாடுவதன் மூலம் பல திட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதன்பிறகு சட்டமன்ற கூட்டத்தொடரின் கோரிக்கைகளின் அடிப்படையில் சில திட்டங்கள் தீட்டப்பட்டன.
அரசின் சார்பில் அமைத்திருக்கக்கூடிய வல்லுநர்களின் அடிப்படையில் பெறப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் சில திட்டங்கள் உருவாக்கப்பட்டன. மாவட்ட நிர்வாகங்களின் கோரிக்கைகளாலும் சில திட்டங்கள் தீட்டப்பட்டன.
இப்படி பல்வேறு வழிகளில் திட்டங்கள் தீட்டப்பட்டாலும் அதனை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது உங்கள் கையில் தான் இருக்கிறது. அடுத்து ஒவ்வொரு திட்டமும் என்ன நோக்கத்தோடு உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கம் சிதையாமலும், அதனை முழுமையாகச் செயல்படுத்திக் காட்டும் வகையில் உங்கள் செயல்பாடுகள் அமைய வேண்டும்.
பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒவ்வொரு திட்டமும் அறிவிக்கப்படுகிறது. பல்வேறு நிதி அமைப்புகள் மற்றும் அரசு கருவூலத்தில் இருந்து மட்டுமல்ல கடன் வாங்கியும் பல திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது. மக்களின் வரிப்பணமும் அரசின் நிதியில் உள்ளது. அதனால் திட்டங்களுக்கான நிதி வீணாகிவிடாமல் விரைவாகவும் சிக்கனமாகவும் திட்டங்களை நீங்கள் செயல்படுத்த வேண்டும்.
திட்டப் பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதிக்குள் குறைவாகச் செலவு செய்து திட்டங்களை முடிப்பதில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாக திட்டப் பணிகளை முடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.
ஏதாவது ஒரு திட்டம் முடக்கப்பட்டாலோ, சுணக்கமாக நடந்தாலோ அது அரசின் மீது விமர்சனமாக வைக்கப்படுகிறது. எனவே இதில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அந்தந்த நிதியாண்டிற்கான பணிகள் அந்த ஆண்டிற்குள் முடிக்கப்பட வேண்டும். இன்றைய ஆய்வுக் கூட்டத்தின் போது சில துறைகளில் 2021-22 ஆம் ஆண்டிற்கான பணிகளே முடிக்கப்படாமல் இருப்பது தெரியவந்தது. இது நல்ல நிர்வாகத்திற்கு அழகல்ல. இதில் மாவட்ட ஆட்சியர்கள் மட்டுமல்ல துறைத் தலைவர்களும் நேரடியாகக் கவனம் செலுத்தி 2021-22 ஆம் ஆண்டிற்கான பணிகளை இன்னும் ஓரிரு மாதங்களில் முடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இது போன்ற ஆலோசனைக் கூட்டங்களை, கண்காணிப்பு கூட்டங்களை, திட்டமிடும் கூட்டங்களை, கலந்துரையாடும் கூட்டங்களை உங்களுக்குக் கீழே இருக்கக்கூடிய அலுவலர்களோடு தொடர்ந்து நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தொடர்ந்து தீவிர கள ஆய்வை மேற்கொள்ளுங்கள். மக்களுடன் தொடர்ந்து பழகுங்கள். அவர்களின் தேவையை உணர்ந்து செயல்படுங்கள். அரசு ஆணைகளை மட்டும் செயல்படுத்தாமல் உங்களது கனவுகளை அரசிடம் தெரிவித்து அதனைச் செயல்படுத்தும் திறன் கொண்டவர்களாக நீங்கள் இருக்க வேண்டும்.
அடுத்த மாதம் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. அதன் பிறகு அமைச்சர்களின் துறை மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட உள்ளது. புதிய புதிய திட்டங்கள் ஏராளமாக வந்து சேர்ந்து விடும். அதற்கு முன்னதாக இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று பேசினார்.
மோனிஷா
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தமிழகத்தில் அதிமுகவே தலைமை: ஜெயக்குமார்