தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில் இன்று (செப்டம்பர் 26) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பருவமழை ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.
”தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையால் பதிக்கக்கூடிய மாவட்டங்களில் எல்லாம் மேற்கொள்ளப்பட வேண்டிய வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் கண்டறியப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகிறது. அவ்வாறு துவக்கப்பட்ட பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். பருவ மழையின் போது நீர்நிலைகளைக் கண்காணிக்க வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் மழைக்காலத்திற்கு முன்பாகவே ஓரிரு முறை தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கக் கூடிய மாவட்டங்களுக்குச் சென்று பணிகளைப் பார்வையிட வேண்டும். அந்த மாவட்டத்திலேயே தங்கி பள்ளிக் கட்டிடங்கள் மற்றும் நிவாரண மையங்களை ஆய்வு செய்ய வேண்டும்.
இந்த ஆண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி, முக்கிய கால்வாய்களில் தூர்வாரும் பணியை மேற்கொண்டுள்ளோம். இதனால் சென்னையின் முக்கிய பகுதிகளில் மழை நீர் தேங்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் மழை நீர் தேங்காது என்று மெத்தனமாக இருக்காமல் உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த அலுவலர்களும், வருவாய்த் துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்புத் துறை, வேளாண் துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்தவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
அரசுத் துறையோடு சேர்ந்து மக்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஒவ்வொரு பகுதியில் இருக்கக் கூடிய குடியிருப்பு சங்கங்கள் அப்பகுதி மக்களோடு சேர்ந்து முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மாநகராட்சி பகுதிகளில் அமைக்கப்படும் அவசர உதவி மையங்கள் 24 மணி நேரமும் முறையாகச் செயல்படுவதைக் கண்காணிப்பு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
கடந்த ஆண்டு வானிலை எச்சரிக்கையைப் பெறுவதற்குத் தாமதமானது. அதனைத் தவிர்க்க இந்த ஆண்டு வானிலை ஆராய்ச்சி மையத்திலிருந்து சரியான தகவலை விரைவாகப் பெற்று அதனைத் தனியார் வானிலை ஆராய்ச்சியாளர்கள் அளிக்கக் கூடிய தகவல்களோடு வருவாய்த் துறை அதிகாரிகள் ஒப்பிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
நிவாரண மையங்களில் பொதுமக்களைத் தங்க வைக்க வேண்டிய சூழல் ஏற்படும் போது அவர்களுக்குத் தரமான உணவு, குடிநீர், மின்சாரம், மருத்துவம், சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதில் குறைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அதிகாரிகளின் கடமை.
ஒவ்வொரு நிவாரண முகாமிற்கும் ஒரு பொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட வேண்டும். இவ்வாறு நாம் பொறுப்பெடுத்துச் செயல்பட்டால், மக்கள், உழவர்கள், மீனவர்கள், போன்றவர்களுக்கு ஏற்படக் கூடிய துயரைக் குறைக்க முடியும் என்பது அரசின் நோக்கம்.
இதுபோன்ற ஆலோசனைக் கூட்டங்களில் மட்டுமல்லாமல் உடனுக்குடன் அதிகாரிகள் ஆலோசனைகளை வழங்கி, பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும். மக்களுக்கு உதவியாக இருக்கும் வகையில் பொது தொலைப்பேசி எண்களைப் பரப்ப வேண்டும். நோய்கள் பரவாமல் தடுக்க வேண்டும். பேரிடர் மேலாண்மையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மின் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும்” என்று பேசினார் முதல்வர் ஸ்டாலின்.
தலைமைச் செயலாளர் இறையன்பு, தொடர்புடைய துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
மோனிஷா
விழுப்புரத்தில் அண்ணா சிலை அவமதிப்பு!
அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி ஆய்வு!