civil service exam age limit

குடிமைப்பணித் தேர்வு வயது வரம்பு: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

தமிழகம்

குடிமைப்பணித் தேர்வர்களுக்கு வயது வரம்பினைத் தளர்த்த கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், “குடிமைப்‌ பணித்‌ தேர்வுகள்‌ உட்பட, ஒன்றிய அரசால்‌ நடத்தப்பட்ட பல்வேறு ஆட்சேர்ப்புத்‌ தேர்வுகளுக்கான வயது வரம்பை கோவிட்‌ பெருந்தொற்றுக்‌ காலங்களில்‌ தவறவிட்ட தேர்வர்கள்‌, ஒருமுறை நடவடிக்கையாக தங்களின்‌ வயது வரம்பை நீட்டிக்க வேண்டுமென்று கோரி வருகின்றனர்.

அவர்களது கோரிக்கையைக் கனிவுடன்‌ பரிசீலிக்கக்‌ கேட்டுக்‌ கொள்கிறேன். அனைத்து தேர்வர்களுக்கும்‌ வயது தளர்வுடன்‌ கூடுதல்‌ முயற்சிக்கான வாய்ப்புகளை வழங்கிட நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.

மேலும்‌, உச்சநீதிமன்றம்‌ பல்வேறு வழக்குகளில்‌ இதுபோன்ற அறிவுரைகள்‌ வழங்கியுள்ளது.‌ பல்வேறு கட்சிகளைச்‌ சேர்ந்த 150-க்கும்‌ மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்‌ தேர்வர்களின்‌ கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில்‌, கொரோனா தொற்றின்‌ தாக்கங்களைக்‌ கருத்தில்கொண்டு அரசுப்‌ பணிகளுக்கான தேர்வுகளை எழுதுவோருக்கான வயது வரம்பை 2 ஆண்டுகள்‌ தளர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது.‌

ஒன்றிய அரசும்‌ ஒன்றிய‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ நடத்திய சேமக்‌ காவல்‌ படைத்‌ தேர்வுகளில்‌, அனைத்துப்‌ பிரிவினருக்கும்‌, ஒரு முறை நடவடிக்கையாக, 3 ஆண்டுகள்‌ வயது வரம்பைத்‌ தளர்த்தி ஆணையிட்டுள்ளது.

தேர்வர்களுக்கு இத்தகைய ஒருமுறை தளர்வு வழங்குவதன்‌ வாயிலாக, அரசுக்கு எவ்வித நிதிச்சுமையும் ஏற்படாது. இது குடிமைப்‌ பணிச்‌ சேவையில்‌ சேர விரும்பும்‌ ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பை வழங்கிடும்.‌

கோவிட்‌ பெருந்தொற்று பாதிப்பைக்‌ கருத்தில்‌ கொண்டு, குடிமைப்‌ பணித்‌ தேர்வர்களுக்கு கூடுதல்‌ வாய்ப்பினை வழங்கிடத்‌ தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மோனிஷா

‘வாத்தி’ உருவாக காரணம் இதுதான்: வெங்கி அட்லூரி

ஒரே அணி… ஓபிஎஸுக்கு நன்றி தெரிவித்த அண்ணாமலை

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *