தற்செயல் விடுப்பு: அரசு ஊழியர்களின் அடுத்த போராட்டம்!

Published On:

| By Aara

செப்டம்பர் 10 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு நடத்திய அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மாநாட்டில் கலந்துகொண்டார்.

சட்டமன்றத் தேர்தலின் போது திமுக தலைவராக ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகளை இந்த மாநாட்டின் மூலம் நிறைவேற்றும் வகையில் அறிவிப்புகளை வெளியிடுவார் முதல்வர் என்று ஆவலாக காத்திருந்தனர் அரசு ஊழியர்கள்.

ஆனால் இம்மாநாட்டில் பேசிய முதல்வர்,  “உங்களுக்கு நான் அளித்த வாக்குறுதிகளை மறக்க மாட்டேன், மறைக்க மாட்டேன், மறுக்கவும் மாட்டேன்” என்று பேசினார்.

மேலும் முதல்வர் வெளியிட்ட சில அறிவிப்புகளும் அரசு ஊழியர்களுக்கு திருப்தியை ஏற்படுத்தவில்லை.

இதை  எடுத்துக் காட்டும் வகையில் முதல்வர் பேசிக் கொண்டிருக்கும்போதே  ஆசிரியர்கள் பலர் கூட்டத்தில் இருந்து வெளியேறிச் சென்ற வீடியோ வெளியாகியது.

இந்த நிலையில்  பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த கட்ட போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

இதுகுறித்து அரசு ஊழியர்கள் வட்டாரத்தில் பேசினோம்.

“பத்து வருடம் காத்திருந்தீர்கள், நாங்கள் வந்து 13 மாதம்தான் ஆகிறது என்று முதல்வர் சொல்கிறார்.

ஆனால் அவர்தான் தேர்தல் பிரச்சாரத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.

செப்டம்பர் 10 ஆம் தேதி மாநாட்டை  அரசு பணியாளர் சங்கம், அரசு ஊழியர் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தின. இதில் முதல்வரின் அறிவிப்பு எந்த வித நம்பிக்கையும் அளிக்கவில்லை.

இந்த நிலையில் இன்னொரு அரசு ஊழியர் சங்கமான தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர்  தமிழ்ச்செல்வி தலைமையில் அடுத்த கட்ட போராட்டம் பற்றிய ஆலோசனை நடந்திருக்கிறது.

இந்த சங்கத்தினர் ஏற்கனவே கடந்த மாதம் 16,17, 18 தேதிகளில் 22 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள்.

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டும் வகையில் அடுத்த கட்ட போராட்டம் பற்றி முடிவெடுத்திருக்கிறார்கள். 

அதன்படி  வரும் 22 ஆம் தேதி அனைத்து அரசு ஊழியர்களும்  தற்செயல் விடுப்பு எடுத்து  அரசு அலுவலகங்கள், பள்ளிகளைப் புறக்கணிப்பது என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

தற்செயல் விடுப்பு என்பதே திட்டமிட்ட போராட்டம்தான். இதற்காக  இன்று (செப்டம்பர் 12) முதல் தமிழகம் முழுதும் அரசு ஊழியர்களிடையே பிரச்சாரம் தொடங்கிவிட்டது. இது நான்காம் கட்ட போராட்டம். அடுத்தடுத்து அரசு ஊழியர் போராட்டம் தொடரும்” என்கிறார்கள்.

வணங்காமுடி

எங்களுக்கு மட்டும் விடியல் இல்லையா? பகுதிநேர ஆசிரியர்கள் குமுறல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel