citu state president soundarajan

போராட்டம் ஒத்திவைத்தற்கான காரணம்: சிஐடியூ சவுந்தரராஜன் விளக்கம்!

தமிழகம்

citu state president soundarajan

நீதிபதிகள் கேட்டுக் கொண்டதாலும் பொதுமக்களின் நலனுக்காகவும் தான் போராட்டத்தை ஒத்திவைத்துள்ளோம் என்று சிஐடியூ மாநில தலைவர் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 6 கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் 2வது நாளாக இன்று (ஜனவரி 10) வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே போக்குவரத்து தொழிற்சங்கத்தின் போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவின் விசாரணையும் இன்று நடைபெற்றது.

விசாரணையின் போது வரும் ஜனவரி 19 ஆம் தேதி வரை தற்காலிகமாக போராட்டத்தை ஒத்திவைப்பதாக அண்ணா, சிஐடியூ உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் இதுகுறித்து சிஐடியூ மாநில தலைவர் சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இரண்டாவது நாளாக இன்று வேலை நிறுத்தம் தொடர்ந்த நிலையில் நேற்றைய தினத்தை விட இன்று பணிக்கு வராதவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. வெளியாட்களை அதிகம் வேலையில் சேர்க்க வேண்டும் என்ற முயற்சியில் அரசு ஈடுபட்டது. போக்குவரத்து அமைச்சரும் வேலைக்கு வாருங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கு மத்தியில் இந்த வேலைநிறுத்தத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று பொதுநல வழக்கு உயர்நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் தாக்கல் செய்யப்பட்டது. சென்னையில் தலைமை நீதிபதி அமர்வில் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. பிறகு அது இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டு காலையும் மாலையும் விவாதிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்டிருக்கும் போதே தலையிட்டு நிறைய கருத்துக்களை சொன்னார்கள். அதில் ஒன்று தான் ’இவ்வளவு நாட்களாக பஞ்சப்படியை ஏன் கொடுக்காமல் இருக்கிறீர்கள்’ என்ற கேள்வி. பொங்கல் நேரத்தில் இந்த வேலை நிறுத்தம் அவசியமா? யோசிக்க வேண்டாமா? என்ற கருத்தையும் தெரிவித்தனர்.

எங்களுடைய நியாயங்களை வழக்கறிஞர்கள் எடுத்து சொன்னார்கள். தொடர்ந்து நீதிபதிகள் ஓய்வு பெற்றவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாயாவது கொடுப்பீர்களா? என்று கேட்டனர். அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் முடியாது என்று மறுத்துவிட்டார். உடனே தலைமை நீதிபதி அரசு தரப்பை பார்த்து, ‘நீங்கள் மிகவும் பிடிவாதமாக இருக்கிறீர்கள். இது சரியல்ல, கண்டனத்திற்குரியது’ என்றார்.

அதே போல் தொழிற்சங்கங்களும் இந்த பிரச்சனையை பொங்கல் பண்டிகையோடு இணைத்து பார்க்க வேண்டும். பொதுமக்களுக்காக அதிக பேருந்துகளை இயக்க வேண்டிய நேரமிது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதனையடுத்து அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கில் வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கவிருந்த நிலையில், வேறு வழியில்லாமல் நாங்கள் மீண்டும் எங்களது கோரிக்கைகளை எழுப்பினோம்.

அதற்கு, ஜனவரி 19 ஆம் தேதி ஒரு பேச்சுவார்த்தை நிலுவையில் உள்ளது. எனவே ஜனவரி 19 ஆம் தேதி வரை வேலைநிறுத்தத்தை ஒத்திவையுங்கள் என்று நீதிபதிகளே எங்களிடம் கூறினர். உங்கள் கோரிக்கை நியாயமற்றது என்று நீதிமன்றம் கூறவில்லை. வேலைநிறுத்தத்தில் ஈடுபட உங்களுக்கு உரிமை இருக்கிறது என்பதையும் மறுக்கவில்லை என்று தெரிவித்தனர்.

ஆனால் பொங்கல் நெருங்கி வருவதால் ஜனவரி 19 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறும் வரை போராட்டத்தை ஒத்திவையுங்கள் என்றும் அதற்கு பிறகு உங்களது முடிவை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தனர்.

மேலும் நாளைய தினமே அனைவரும் வேலைக்கு செல்ல வேண்டும். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது அரசு எந்த விதமான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க கூடாது என்பதையும் நீதிபதிகள் தெளிவாக சொல்லியுள்ளார்கள்.

இதனை பரிசீலித்த எங்களது கூட்டமைப்பு தோழர்கள் நீதிமன்றத்தின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டு, பொதுமக்களின் சிரமத்தையும் கணக்கில் கொண்டு இந்த வேலைநிறுத்தத்தை ஒத்திவைப்பதற்கு நாங்கள் சம்மதம் தெரிவித்துள்ளோம்.

ஜனவரி 19 ஆம் தேதிக்கு பிறகு பேச்சுவார்த்தையில் எந்தவிதமான நியாயமான பதில்களும் கிடைக்கவில்லை என்றால் எங்களது போராட்டம் அமைதியான முறையில் தொடரும். எங்களது இந்த கோரிக்கைகளைத் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருப்போம்” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

விஜயகாந்த் குடும்பத்திற்காக ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்!

வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்: அமைச்சர் ரியாக்சன்!

citu state president soundarajan

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0