தமிழக அரசு வெளி ஆட்களை வைத்து பேருந்தை இயக்குவது சட்டவிரோதம் என்று சிஐடியு தலைவர் செளந்தரராஜன் இன்று (ஜனவரி 9) தெரிவித்துள்ளார்.
ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று சிஐடியு, அண்ணா உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போக்குவரத்து தொழிற்சங்கத்தின் வேலை நிறுத்த போராட்டம் குறித்து சிஐடியு தலைவர் செளந்தரராஜன் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, “தமிழகம் முழுவதும் 40 சதவிகித பேருந்துகள் மட்டும் தான் இயக்கப்படுகிறது. 60 சதவிகித பணியாளர்கள் இன்று காலையில் வேலைக்கு செல்லவில்லை. வெளி ஆட்களை வைத்து பல இடங்களில் பேருந்துகளை இயக்கி வருகிறார்கள். இது மிக மோசமான முடிவு, சட்டவிரோதமான நடவடிக்கை.
அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது வெளி ஆட்களை வைத்து பேருந்துகளை இயக்கியதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் தற்போது அவர்களே இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள்.
இதனால் விபத்துக்கள் ஏற்பட்டால் மிகுந்த பாதிப்பு ஏற்படும். திமுக அரசின் இந்த நடவடிக்கை விஷப்பரிட்சை.
தொழிலாளர்களுக்கு உரிய நிதியை தான் கேட்கிறோம், அதனை தர மறுப்பது சட்டவிரோதம். தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
போக்குவரத்து தொழிலாளர்களின் நிதியை வைத்து தான் போக்குவரத்து கழகத்தையும், தமிழக அரசின் பல திட்டங்களையும் செயல்படுத்துகிறீர்கள். இதுதொடர்பாக பொங்கலுக்கு பிறகு பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று சொல்வதை எப்படி ஏற்க முடியும்?
அதிமுக ஆட்சிக்காலத்தில் இதே பிரச்சனைக்காக தான் சிஐடியு மற்றும் தொமுச போராட்டம் நடத்தினோம். அரசு எப்போது அழைத்தாலும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு!
சென்னையில் 55 சதவிகிதம் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லவில்லை: கமலக்கண்ணன்