பண்டிகைகள் அல்லது விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை உயர்த்துவது தொடர்கதையாகி வருகிறது.
தமிழ்நாடு ஆம்னி பேருந்துகள் சங்க இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளபடி தமிழகம் முழுவதும் 366 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஏறத்தாழ 4 ஆயிரத்துக்கும் அதிகமான ஆம்னி பேருந்துகள் இயங்குகின்றன.
ஒவ்வொரு பேருந்தின் வசதிக்கும், வழித்தடத்துக்கும், அதன் தூரத்துக்கும் ஏற்ற வகையில் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது.
ஆனால் சாதாரண நாட்களில் 500 ரூபாய்க்கு நிர்ணயிக்கப்படும். ஒரு இருக்கையின் கட்டணம், பண்டிகை நாட்களில் 2000, 3000 என்ற வகையில் உயர்த்தப்படுகிறது.
அப்படி தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தியுள்ளன.
வரும் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1 வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ, மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு இன்றுடன் அரையாண்டு தேர்வு முடிவடைகிறது. மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு நாளை வரை தேர்வு நடைபெறுகிறது.
தேர்வு முடிந்ததும் ஜனவரி 1 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியூரில் உள்ள பெற்றோர்களும், மாணவர்களும் சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ளனர். அதேசமயத்தில் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாட சொந்த ஊர்களுக்கும், சுற்றுலாத் தலங்களுக்கும் செல்ல மக்கள் தயாராகி வருகின்றனர்.
இதனால் லட்சக்கணக்கான மக்கள் சென்னையிலிருந்து பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். இதனைப் பயன்படுத்தி தற்போது ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை உயர்த்தியுள்ளன.
சென்னை முதல் நாகர்கோயில் வரை செல்ல படுத்துக்கொண்டே பயணிக்கும் ஏசி பேருந்தில் ஒரு இருக்கைக்கு ரூ. 4000 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏசி இல்லாத பேருந்துகளில் ரூ.1999 என்ற வகையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுவே விடுமுறை தினம் முடிந்து ஜனவரி 2ஆம் தேதி சென்னையிலிருந்து நாகர்கோவில் செல்ல புக் செய்யும் பட்சத்தில் குறைந்தபட்ச கட்டணம் ஏசி இல்லாத பேருந்துகளில் 600 ரூபாயிலிருந்து தொடங்குகிறது. ஏசி பேருந்துகளில் 1800 ரூபாய்க்கு உள்ளதாகத்தான் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதன்படி பார்த்தால் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இருமடங்கு, முன்று மடங்கு கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

அதுவே சென்னை டூ சேலம் செல்ல சாதாரண நாட்களில், 450 ரூபாயிலிருந்து கட்டணம் நிர்ணயிக்கப்படும் இந்த நிலையில், நாளைக்கான கட்டணம் 1000 ரூபாய்க்கு அதிகமாகவே உள்ளது. அதிகபட்சமாக 2700 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று திருச்சி, மதுரை, கோவை என அனைத்து ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகளிலும் கட்டணம் அதிகமாகவே உள்ளதால் சொந்த ஊருக்கு செல்வோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்தச்சூழலில் நாளை 300 பேருந்துகள், நாளை மறுநாள் 300 பேருந்துகள் என 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
விடுமுறையை முன்னிட்டு லட்சக்கணக்கானோர் ஊருக்குச் செல்ல இருக்கும் நிலையில் 600 பேருந்துகள் போதாது என்பது பயணிகளின் கருத்தாக உள்ளது.
அதுபோன்று ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னதாக, “ஆம்னி பேருந்துகளின் கட்டண உயர்வு ஏழைகளைப் பாதிக்காது. கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்படுவது தெரிந்தும் . சகல வசதியோடு இருக்கும் என்ற எண்ணத்தோடு சிலர் அதில் பயணம் செய்கின்றனர். ஏழை, எளிய மக்கள் அரசு பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள்” என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா