சோளே குல்ச்சா வட இந்தியாவில் மிகவும் பிரபலமான இந்திய சிற்றுண்டி. தெருக்கடை உணவாக தற்போது எல்லா ஊர்களிலும் தயாரிக்கப்படும் இதற்கென்று தனி சுவைஞர்கள் உண்டு. அப்படிப்பட்ட சோளே குல்ச்சாவை நீங்களும் வீக் எண்ட் ஸ்பெஷலாக செய்து அசத்த இந்த ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
சோளே மசாலா செய்ய…
வெள்ளைப்பட்டாணி – ஒரு கப் (நான்கு மணி நேரம் ஊறவைக்கவும்)
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கியது)
தக்காளி – இரண்டு (பொடியாக நறுக்கியது)
சாட் மசாலாத்தூள் – அரை டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை டேபிள்ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – அரை டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2
எலுமிச்சைச்சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
குல்ச்சா செய்ய…
மைதா மாவு – ஒரு கப்
கோதுமை மாவு – ஒரு கப்
சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன்
ஈஸ்ட் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் – ஒரு துண்டு
கொத்தமல்லி – சிறிதளவு
எப்படிச் செய்வது?
ஊறவைத்த வெள்ளைப் பட்டாணியை சிறிது உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு சாட் மசாலா, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து ஒரு தடவை கிளறி விடவும். பிறகு இத்துடன் வேகவைத்த பட்டாணியை தண்ணீருடன் சேர்த்துக் கிளறவும். மசாலா நன்கு சேர்ந்து வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். பின்னர் இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு, உப்பு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
குல்ச்சா செய்ய…
மிதமான வெந்நீரில் சர்க்கரையைச் சேர்த்துக்கரைக்கவும். இத்துடன் ஈஸ்ட் சேர்த்துக் கரைத்து ஒரு நிமிடம் மூடி வைக்கவும். ஈஸ்ட் நுரைத்துவந்ததும், அதனுடன் மைதா மாவு, கோதுமை மாவு, உப்பு, வெண்ணெய் ஆகியவற்றைச் சேர்க்கவும். பிறகு இவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் அல்லது பால் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும். மெல்லிய ஈரத் துணியில் இதைச் சுற்றி ஒரு மணி நேரம் மூடி வைக்கவும்.
பிறகு எடுத்து அதன் மீது லேசாக மைதா தூவி உருண்டைகளாக உருட்டி சப்பாத்தியாக வேண்டிய வடிவில் திரட்டிக்கொள்ளவும். பிறகு திரட்டிய சப்பாத்திகளை மீண்டும் ஈரத் துணியால் 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். பின்னர் இந்தச் சப்பாத்திக்களை வெளியே எடுத்து அவற்றின் மீது கொத்தமல்லி தூவவும். சூடான தோசைக்கல்லில் சிறிது வெண்ணெய்விட்டு அதில் இந்தச் சப்பாத்திகளை இருபக்கமும் சுட்டெடுக்கவும். குல்ச்சா தயார். இந்த டேஸ்ட்டி குல்ச்சாவைத் தயாரித்து வைத்துள்ள சோளேவுடன் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : ஜவ்வரிசி கிச்சடி
கிச்சன் கீர்த்தனா : தவா புலாவ்!
நாம் தமிழர் கட்சியில் தாசில்தார்… காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!