சித்திரை விழா: சென்னையில் இருந்து கேரளாவுக்கு சிறப்பு ரயில்!
சித்திரை விழாவையொட்டி, சென்னையில் இருந்து சேலம் வழியே கேரளாவுக்கு 13ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் பண்டிகை காலத்தையொட்டி முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகளவு இருக்கும். இதனால், கூட்ட நெரிசலைத் தவிர்க்க சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் அறிவித்து வருகிறது.
இதில், சித்திரை விஷூ விழாவையொட்டி, சென்னை சென்ட்ரலில் இருந்து சேலம், ஈரோடு, கோவை வழியே கேரள மாநிலம் கண்ணூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதன்படி, சென்னை சென்ட்ரல்-கண்ணூர் பண்டிகை கால சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (எண்: 06047) வரும் 13ஆம் தேதி (வியாழக்கிழமை) இயக்கப்படுகிறது.
சென்னை சென்ட்ரலில் பிற்பகல் 3.10 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாகச் சேலத்துக்கு இரவு 8.25 மணிக்குச் செல்லும்.
பின்னர், 10 நிமிடத்தில் புறப்பட்டு, ஈரோட்டுக்கு இரவு 9.30 மணிக்கும், திருப்பூருக்கு இரவு 10.05 மணிக்கும், கோவைக்கு இரவு 11.12 மணிக்கும் சென்று,
பாலக்காடு, திரூர், கோழிக்கோடு, வடகரா, தலச்சேரி வழியே கண்ணூருக்கு அடுத்த நாள் (14ஆம் தேதி – வெள்ளிக்கிழமை) அதிகாலை 5.15 மணிக்குச் சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில், கண்ணூர்-சென்னை சென்ட்ரல் பண்டிகை கால சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (எண் 06048) வரும் 14ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) இயக்கப்படுகிறது.
கண்ணூரில் காலை 8.35 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், கோழிக்கோடு, பாலக்காடு வழியே கோவைக்கு மதியம் 1.50 மணிக்கும், திருப்பூருக்கு பிற்பகல் 2.40 மணிக்கும், ஈரோட்டுக்கு பிற்பகல் 3.20 மணிக்கும் வந்து சேலத்துக்கு மாலை 4.20 மணிக்குச் சென்றடையும்.
பின்னர் 10 நிமிடத்தில் புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் வழியே சென்னை சென்ட்ரலுக்கு இரவு 10.35 மணிக்குச் சென்றடையும்.
இதைப் பயணிகள் பயன்படுத்திக் கொள்ள தெற்கு ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
டிஜிட்டல் திண்ணை: அமித் ஷாவிடம் அதிமுக புகார்- அண்ணாமலையை இயக்குவது யார்?
கள்ளழகர் கோவிலில் பங்குனி விழா கோலாகலம்!