உங்கள் குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து போடவில்லையா?

தமிழகம்

சொட்டு மருந்து போடாத குழந்தைகளுக்கு வீடு வீடாக சென்று போடப்படும் என்று தமிழ்நாடு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் போலியோ நோயினால் பாதிக்கப்படுவதை தடுக்க நாடு முழுவதும் ஆண்டு தோறும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி நேற்று தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் 57.84 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போட தமிழ்நாடு சுகாதாரத் துறை இலக்கு நிர்ணயித்திருந்தது.

அரசு மருத்துவமனைகள் தொடங்கி, ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என தமிழ்நாடு முழுவதும் 43,051 மையங்களில் சொட்டு மருந்து போடப்பட்டது.

இதுதவிர நேற்றைய தினம் பயணத்தில் இருக்கும் குழந்தைகள் விடுபட்டுவிடக் கூடாது என்பதற்காக பேருந்து, ரயில் நிலையங்களிலும் முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.

காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை சுகாதார பணியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் போலியோ மருந்து போடும் பணியில் ஈடுபட்டனர். ‘வேண்டாம், கசக்கிறது’ என அடம்பிடித்த குழந்தைகளுக்கு சிரிப்பு காட்டி, சாக்லேட் கொடுத்து மருந்து வழங்கினர்.

மருந்து போட்டுக்கொண்ட குழந்தைகளுக்கு கை அல்லது கால்களில் அடையாளமாக மை வைக்கப்பட்டது. சொட்டு மருந்து போடும் பணியில் மட்டும் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான பணியாளர்கள் ஈடுபட்டனர்.

தலைநகர் சென்னையில் 1,646 மையங்களில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இப்பணியில் ஈடுபட்டனர்.
இந்தசூழலில் தமிழ்நாடு முழுவதும் 56.34 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டதாக தமிழக சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சென்னை – 5,27,092, மதுரை -2,62,363, சேலம் – 1,33,570, கள்ளக்குறிச்சி – 1,11,034, விழுப்புரம் -2,68,427, திருச்சி -1,93,963, விருதுநகர் -1,28,967 என தமிழ்நாடு முழுவதும் 56.34 லட்சம் குழந்தைகளுக்கு மருந்து போடப்பட்டுள்ளது. இது 98.18 சதவிகிதம் ஆகும்.

கோவில்பட்டியில் 113.58 சதவிகித குழந்தைகளுக்கு மருந்து போடப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி, திருவாரூர், வேலூர், தர்மபுரி, தஞ்சாவூர், கரூர், கிருஷ்ணகிரி, திருச்சி, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய இடங்களில் 100 சதவிகிதம் போடப்பட்டுள்ளது.

விடுபட்ட குழந்தைகளுக்கு இன்று முதல் 7 நாட்களுக்கு சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக சென்று சொட்டு மருந்து போடுவார்கள். விடுபட்ட குழந்தைகளுக்கு இந்த வாய்ப்பை பயன்படுத்தி போட்டுக்கொள்ளுமாறு பெற்றோர்களுக்கு  சுகாதாரத் துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று (மார்ச் 4) சென்னையில் 24,020 குழந்தைகளுக்கு வீடு வீடாக சென்று போலியோ சொட்டுமருந்து போடப்பட்டுள்ளது.

சொட்டு மருந்து போடுவதன் மூலம் தமிழ்நாட்டில் 2004ஆம் ஆண்டு முதலும், இந்தியாவில் 2014ஆம் ஆண்டு முதலும் போலியோ பாதிப்பு இல்லை என சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக உதவவில்லை: மோடி குற்றச்சாட்டு!

ரஞ்சி கோப்பை: தமிழ்நாட்டை வீழ்த்தி… 47-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மும்பை

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *