திருப்பூர் அருகே விடுதியில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டு 3 குழந்தைகள் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்த 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த திருமுருகன்பூண்டியில் விவேகானந்தா சேவாலயம் என்ற பெயரில் தனியார் காப்பகம் செயல்பட்டு வருகிறது. திருப்பூரைச் சேர்ந்த செந்தில்நாதன் (70) என்பவர் இந்த சேவாலயத்தை நிறுவி நடத்தி வருகிறார்.
இந்த சேவாலயத்தில் தற்போது 15 ஆதரவற்ற சிறுவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். அதில் ஒரு சிறுவனை உறவினர் அழைத்துச் சென்றிருந்ததால் மீதி 14 குழந்தைகள் இருந்தனர்.
இந்நிலையில் இன்று(அக்டோபர் 6) காலை உணவு சாப்பிட்ட குழந்தைகள் 14 பேரும் மயக்கம் அடைந்துள்ளனர். இதை அடுத்து சேவாலய வார்டன் கோபிகிருஷ்ணன், காவலர் மற்றும் அக்கம் பக்கத்தினர் குழந்தைகளை உடனடியாக மீட்டு திருப்பூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர்.
இதில் மாதேஷ் (14), பாபு (10), அத்தீஷ் (11) ஆகிய 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இரண்டு சிறுவர்கள் சேவாலயத்திலேயே உயிரிழந்த நிலையில், ஒரு சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தான்.
எஞ்சிய 11 சிறுவர்களும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார் சேவாலயத்தை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தகவல் அறிந்து பொதுமக்கள் மற்றும் கட்சியினர் சேவாலயம் முன்பு திரண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரபாகரன், விவேகானந்தா சேவாலயத்தில் ஆய்வு நடத்தினார். பின்னர் செய்தியார்களிடம் பேசிய அவர், நேற்று மதியம் அனைத்து சிறுவர்களுக்கும் காய்ச்சல் இருந்துள்ளது.
அதனால் நேற்று மதியம் சேவாலயத்தில் வழங்கப்பட்ட ரசம் சாதத்தை யாரும் சாப்பிடவில்லை. இரவும் சிறுவர்கள் யாரும் சாப்பிடவில்லை.
நேற்று இரவு மருத்துவர் ஆலோசனை இன்றி டோலோ மாத்திரை பாதியளவு கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று காலை இட்லி மற்றும் வெளியாட்கள் கொடுத்த லட்டு ஆகியவற்றை சிறுவர்கள் சாப்பிட்டுள்ளனர்.
அவர்கள் உட்கொண்ட ரசம், சாதம், தண்ணீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து 174(3) பிரிவில் சேவாலய நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிறுவனர் செந்தில்வேல் வெளியூரில் இருப்பதால் அவர் வந்தவுடன் விசாரணை மேற்கொள்ளப்படும்.
4 ஆம் தேதி இரவு சுண்டல், இனிப்பு(லட்டு) இல்லத்திற்கு வெளியே இருந்து வந்த உணவுகள் வழங்கப்பட்டுள்ளது.
சிறுவர்களுக்கு காய்ச்சல் வந்த காரணம் மற்றும் அவர்கள் உட்கொண்ட உணவுகளை ஆய்வுக்கு உட்படுத்தி அதன் முடிவுக்கு பிறகும், பிரேத பரிசோதனை முடிவுக்குப் பிறகும் தான் இறப்பிற்கான காரணம் தெரியவரும்.
மூன்று சிறுவர்கள் உயிரிழந்ததால் இந்த சம்பவம் குறித்து உதவி ஆணையர் அபிநவ் குமார் புலனாய்வு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறினார்.
இதையடுத்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களிடம் குழந்தைகளின் நிலை குறித்து விசாரித்தார். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இந்தநிலையில் குழந்தைகள் மரணம் தொடர்பாக 3 விசாரணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் பண்டரிநாதன் தலைமையில் ஒரு குழுவும், மாவட்ட குழந்தைகள் நல குழும அதிகாரி ரஞ்சித பிரியா தலைமையில் ஒரு குழுவும், சமூக பாதுகாப்புத்துறை இயக்குநர் வளர்மதி ஐ.ஏ.எஸ் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்கு பிறகு சமூக நலத்துறையில் அறிக்கை தாக்கல் செய்யப்படும். குழந்தைகள் மரணத்திற்கு காரணமாக யார் இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
கலை.ரா
கர்மா ஒரு காரணமா? தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்த உயர் நீதிமன்ற பெஞ்ச்!
தற்காலிக சிறப்பு ஆசிரியர்கள் நியமனம்: மாதம் ரூ. 5000 ஊதியம்!