உசிலம்பட்டியில் பிரபல தொழிலதிபரின் 4வயது பெண் குழந்தையை கடத்திச் சென்ற நிலையில், விரைந்து செயல்பட்டு குழந்தையை மீட்டிருக்கிறார்கள் போலீஸார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் பார்த்தசாரதி. இவரது மனைவி வித்யா. இவர்களுக்கு 4 வயதில் ஜனனி என்ற பெண் குழந்தை உள்ளது.
இன்று (ஆகஸ்டு 9) முகரம் அரசு விடுமுறை தினம் என்பதால் பாட்டி வீட்டிற்கு குழந்தை ஜனனி சென்றுள்ளார். இந்நிலையில் பாட்டி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை காலை 9.30 மணியில் இருந்து காணவில்லை. வீட்டு வாசலில் தேடிய குடும்பத்தினர் பதறிவிட்டனர்.
இதுகுறித்து குழந்தையின் பாட்டி வீரம்மாள் உடனே போலீசில் புகார் கொடுத்தார். பாடியின் புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உசிலம்பட்டி காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குழந்தையை கடத்தி சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதனையடுத்து அனைத்து பகுதிகளிலும் வாகன சோதனையை போலீசார் துரிதப்படுத்தி தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் உசிலம்பட்டி அருகே உள்ள சில்லாம்பட்டி அருகே சேர்ந்த குமார் – மகேஸ்வரி தம்பதியை போலீஸார் மதியம் 1. 30 மணியளவில் வாகன சோதனையின் போது இடைமறித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் குழந்தையை கடத்தி வந்தது தெரிய வந்தது.

இச்சம்பவம் தொடர்பாக குமார் – மகேஸ்வரி இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
கடத்தப்பட்ட குழந்தையை நான்கு மணி நேரத்தில் மீட்டு அக்குழந்தையின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர் போலீஸார்.
க.சீனிவாசன்
கொள்ளிடம் பழைய பாலம்: இடிந்து விழுந்த 17வது தூண்!