சென்னை அடையாறு பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளைத் தலைமை செயலாளர் இறையன்பு இன்று (அக்டோபர் 23) பார்வையிட்டார்.
சென்னையில் மாநகராட்சி சார்பில் மழை நீர் வடிகால் அமைத்தல் மற்றும் கால்வாய்களைத் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பொதுப்பணித்துறை சார்பில் பக்கிங்காம் கால்வாய்களைத் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின் போது சென்னையில் சாலைகளில் ஏற்படும் மழை நீர் தேக்கம், வெள்ளம், இதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் ஆகியவற்றைச் சரிசெய்வதற்காக மேற்கண்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இன்னும் சில தினங்களில் பருவமழை தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பருவமழை தொடங்குவதற்கு முன்பு மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அரசு செயல்பட்டு வருகிறது.
இன்று (அக்டோபர் 23) காலை சென்னை அடையாறு பகுதிகளில் நடைபெற்று வரும் இறுதிக்கட்ட மழைநீர் வடிகால் பணிகளைத் தலைமைச் செயலாளர் இறையன்பு பார்வையிட்டார்.
வடிகால் பணிகள் முடிக்கப்பட்ட விவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்து கொண்டார்.
தீபாவளி பண்டிகையைக் காரணம் காட்டி பணிகளை நிறுத்தி விடக் கூடாது என்றும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் நேற்று காலை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
சுமார் 2 மணி நேரத்திற்குப் பெய்த மழைக்கே சாலைகளில் நீர் தேங்கின. ஆகையால் மழைநீர் வடிகால் மூலம் பருவமழையின் போது நீர் தேங்காமல் இருக்குமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மோனிஷா
சத்யா… விஷ்ணு பிரியா: தொடரும் ஒருதலை காதல் கொலைகள்!
ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட விஷம் : மாணவன் தற்கொலை!