கன்னியாகுமரி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில், திருவள்ளுவர் சிலை அமைத்து 25ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.
இன்று (டிசம்பர் 31) திருக்குறள் ஓலைச்சுவடிகள், புத்தகங்கள், மின்நூல்கள் மற்றும் திருவள்ளுவர் சிலை பற்றிய புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்து, திருவள்ளுவர் திருவுருவச் சிலை வெள்ளி விழா சிறப்பு மலரை வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் சில அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
“முக்கடல் சூழும் குமரிமுனையில் இங்கிருந்து சுற்றுலாப் பயணிகள் அனைவரும் அய்யன் திருவள்ளுவர் சிலையை சென்றடைய பயனடைவதற்காக படகு சவாரி வசதியை மேம்படுத்துவதற்காக 3 புதிய பயணிகள் படகுகள் வாங்கப்படும்.
முதல் படகிற்கு தியாகத்தின் உருவாகி, தொண்டின் கருவாகி, தமிழ்நாட்டில் அடித்தளமிட்ட பெருந்தலைவர் காமராசர் பெயரும், இரண்டாம் படகிற்கு தென்குமரியை தமிழ்நாட்டுடன் இணைக்க வலியுறுத்தி போராடி சாதனைப் படைத்த சாதனையாளர் மார்சல் நேசமணி பெயரும், மூன்றாம் படகிற்கு கனடாவில் பிறந்தாலும், கன்னித்தமிழ் வளர்த்தவரும், திருக்குறளை மொழிப் பெயர்த்தும், தமிழ் இலக்கண நூலை எழுதியும், அழியாப் படைப்புகளை அளித்த ஜி.யு.போப் பெயரும், என மூன்று பெயர்களும் அந்தப் படகுகளுக்கு சூட்டப்படும்.
இரண்டாவது அறிவிப்பு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் திருக்குறளில் ஆர்வமும், புலமையும் மிக்க ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்குப் பயிற்சி வழங்கி மாவட்டம்தோறும் தொடர் பயிலரங்குகள், பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். ‘திருக்குறள் திருப்பணிகள்’ தொடர்ந்து நடைபெற திட்டம் வகுக்கப்படும். இதற்காக, ஆண்டிற்கு மாவட்டம் ஒன்றிற்கு 3 இலட்சம் ரூபாய் வழங்கப்படும்.
மூன்றாவது அறிவிப்பு ஆண்டுக்கு 133 உயர்கல்வி நிறுவனங்களில், திருக்குறள் தொடர்பான கலை இலக்கிய அறிவுசார் போட்டிகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்த திட்டமிடப்படும்.
நான்காவது அறிவிப்பு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் கடைசி வாரம் ‘குறள் வாரம்’ கொண்டாடப்படும்.
ஐந்தாவது அறிவிப்பு தமிழ்த் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான திருக்குறள் மாணவர் மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படும்.
ஆறாவது அறிவிப்பு திருக்குறளும், உரையும் அரசு அலுவலகங்களில் எழுதப்படுகிறது போல, தனியார் நிறுவனங்களிலும் எழுதுவதற்கு, ஊக்குவிக்க உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
இத்துடன் சேர்த்து, குமரிக்கு வந்து இந்த பகுதிக்கான அறிவிப்பு செய்யாமல் இருக்க முடியாது
தமிழ்நாட்டின் தென்கோடியில் அமைந்திருப்பது மட்டுமில்லாமல் வள்ளுவர் சிலையால் சிறப்பு பெற்றிருக்கின்ற, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்ற வகையில், கன்னியாகுமரி பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்” என்று அறிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
‘சித்ரா அறையிலேயே பண்ணிட்டாரு என் வீடு சுடுகாடு ஆகிடுச்சே’- கதறிய தாயார்!