முதலமைச்சரே என்னை காப்பாத்துங்க, உங்கள தான் நம்பியிருக்கேன் என்று அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட 9 ஆம் வகுப்பு மாணவி கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த வீடியோ வெளியாகி இருக்கிறது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அம்மன் நகரில் வசிப்பவர் கனிமொழி. இவரது கணவர் முத்தழகன். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு முத்தழகன் இறந்துவிட்டார். இவர்களது மகள் அபிநயா, சீர்காழியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
இவருக்கு திடீரென்று காலில் வலி ஏற்பட்டு நிறம் மாறத் தொடங்கியுள்ளது. மருத்துவரிடம் சென்றபோது எஸ். இ. எல் என்ற அபூர்வ வகை நோய் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட நிலையில் மாணவி அபிநயா, தற்போது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவரது இரண்டு கால்களையும் அகற்ற வேண்டுமென மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தந்தையை இழந்த ஏழை குடும்பத்தைச் சேர்ந்த மாணவி அபிநயா மருத்துவ செலவு செய்ய முடியாமல் தவித்து வருகிறார். தன்னை காப்பாற்றுமாறு தமிழக முதல்வருக்கு அவர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
முதல்வருக்கு அவர் வைத்த கோரிக்கையில், “எனக்கு கால் வலி தாங்க முடியல. முதலமைச்சர்தான் எப்படியாச்சும் என் காலையும், உயிரையும் காப்பத்தனும். ஐயா உங்கள மட்டும்தான் நம்பியிருக்கேன். கால் இல்லாம என்னால இருக்க முடியாது.
நா கஷ்டப்படுற குடும்பத்துல இருக்கேன். கால் வெட்டி எடுக்குற சர்ஜரி எல்லாம் என்னால தாங்க முடியாது. கால்ல வெட்டி எடுக்காம எப்படியாச்சும் என்ன குணப்படுத்துங்க ஐயான்னு” அந்த மாணவி கண்ணீர் மல்க பேசி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
இதேபோன்று ஆவடி அடுத்த வீராபுரத்தை சேர்ந்த 9 வயது சிறுமி டான்யா அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார். இது செய்திகளில் வெளியானதையடுத்து சிறுமிக்கு சிகிச்சை அளிக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதனையடுத்து தண்டலத்தில் உள்ள சவீதா மருத்துவமனையில்,ஜெர்மன் நாட்டு மருத்துவ வல்லுநர்கள் 2 பேர் அடங்கிய 10 பேர் கொண்ட மருத்துவ குழு அறுவை சிகிச்சையை செய்தனர். அந்த வகையில் தற்போது மாணவி அபிநயாவும் கால் அழுகல் என்னும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு முதல்வரிடம் உதவி கேட்டிருக்கிறார்.
கலை.ரா
பொது இடத்தில் மது: டாஸ்மாக்கும் தமிழக அரசும் பதிலளிக்க உத்தரவு!
மதுரை எய்ம்ஸ்: வைகோ கேள்வியும் மத்திய அரசின் பதிலும்!