“மக்களுடன் போலீஸ் நெருங்க வேண்டும்” கள ஆய்வில் முதல்வர் ஸ்டாலின்

தமிழகம்

கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தினை இன்று (பிப்ரவரி 1) துவக்கி வைத்தார் மு.க.ஸ்டாலின். முதல் மாவட்டமாக வேலூரில் பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் கள ஆய்வில் முதலமைச்சர் ஈடுபட இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

அதற்காக இன்று காலை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து வேலூர் மாவட்டத்திற்கு ரயில் பயணம் மேற்கொண்டார் முதலமைச்சர். ரயில் நிலையத்தில் முதலமைச்சருக்கு, கட்சியினர் மற்றும் தொண்டர்கள் திரண்டு வந்து வழியனுப்பி வைத்தனர்.

சென்னையில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் மதியம் 12.30 மணியளவில் காட்பாடியில் இறங்கினார். அங்கேயும் அவருக்குப் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

Chief Minister mk stalin started the field survey in vellore

தொடர்ந்து, காட்பாடியில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வேலூர் உட்பட 36 மாவட்டங்களில் ரூ. 784 கோடி மதிப்பீட்டில், 2,381 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 5,351 கட்டடங்கள் கட்டுவதற்கான பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

வேலூர் மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியங்களில் 15 கோடி 96 லட்சம் மதிப்பீட்டில், 55 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி திட்டங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை 5 மணியளவில், வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில், கலைஞர் மு. கருணாநிதி மாணவர் விடுதி மற்றும் பியர்ல் ஆராய்ச்சிக் கட்டடத்தைத் திறந்து வைத்தார்.

Chief Minister mk stalin started the field survey in vellore

அதனையடுத்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை, மாவட்ட காவல்துறை உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வுக்கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர், ”இந்த மண்டல ஆய்வு என்பது மாநிலத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான ஒரு முன்னோடித் திட்டம். இத்திட்டம் வெற்றி பெற்றால் நீங்களும் வெற்றி பெறுவீர்கள், உங்களுடன் சேர்ந்து நானும் வெற்றி பெறுவேன். நம்முடைய உழைப்பில் இந்த மாநிலமே வெற்றி பெறும்.

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது, புலனாய்வு செய்வது, போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது ஆகிய மூன்றும் காவல்துறையின் மூன்று தூண்கள். இப்பணிகளில் அதிக பளு இருக்கக் கூடாது என்றால், அதற்குக் குற்றங்களை முன்கூட்டியே தடுப்பது மிக முக்கியம். அந்த அடிப்படையில் “Preventive policing” என்பது காவல்துறையின் இதயமும், ஆன்மாவும் போன்றது.

இதில் அனைத்து நிலை காவல் அதிகாரிகளும் கவனம் செலுத்த வேண்டும். காவல்துறை அதிகாரிகள் வழக்கிற்காக மட்டும் போகாமல், சாதாரணமாக அவ்வப்போது கிராமங்களுக்குச் சென்று மக்களுடன் பேச வேண்டும், இதைச் செய்தாலே, சட்டம் ஒழுங்கு பிரச்சினை கிராமங்களில் வராது. இப்படிச் செய்தால் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய சூழலும் எழாது.

மக்கள் – காவல்துறை சந்திப்புகளை அதிகப்படுத்த வேண்டும். இளைஞர்கள் – பள்ளி கல்லூரி மாணவர்களையும் சந்தித்துப் பேசி, சட்டத்தின் ஆட்சி இளைஞர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்று எடுத்துக்கூறி, அவர்களை இளம் பருவத்திலேயே குற்றச் செயல்கள் பக்கம் போகாமல் தடுத்திட முயற்சிகள் எடுக்க வேண்டும். விளிம்பு நிலை ஏழை எளிய மக்கள், பெண்கள், உங்கள் உதவி தேடி வரும்போது அவர்களுக்குத் துணையாக இருந்து நீதி பெற்றுத் தர வேண்டும்” என்று பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து,

“எப்.ஐ.ஆர் போட்டு விட்டால் மட்டுமே பிரச்சினை தீராது. அவற்றில் குற்றப் பத்திரிகையை விரைவில் தாக்கல் செய்து வழக்கில் குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

அப்போதுதான் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அச்சம் வரும். இந்த ஆட்சியில் தப்பு செய்தால் தப்பிக்க முடியாது என்ற பயம் வரும்.

மேலும் குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் குற்றங்கள் ஆகிய வழக்குகளில் தீவிர கவனம் செலுத்தவும், போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை மிகக் கடுமையாக எடுக்க வேண்டும்.

சட்டம் ஒழுங்கு பராமரிப்பின் போது வருவாய்த்துறையினருடன் இணைந்து செயல்பட வேண்டும். விழிப்புணர்வு பணிகளில் மாவட்ட ஆட்சியரோடு இணைந்து பணிகளை மேற்கொள்வதன் மூலம் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளைச் சிறப்பாக மேற்கொள்ள இயலும்.

காவல்துறை என்ற குடும்பத்தில் மாவட்டத்தின் எஸ்.பி.தான் தலைவர் என்ற நினைப்பில் செயல்பட வேண்டும். தங்களுக்குக் கீழ் பணியாற்றுபவர்கள் நிம்மதியாக, நேர்மையாகப் பணியாற்ற வழி செய்தாலே மாவட்டத்தில் அமைதி நிலவும்.

சட்டத்தின் ஆட்சி எவ்வித சிரமும் இன்றி நிலைநாட்டப்படும். எனவே, முதலில் குறிப்பிட்டதைப் போல காவல்துறையின் மூன்று தூண்களையும் கட்டிக் காப்பாற்றினாலே உங்கள் மாவட்டம் சிறக்கும், இந்த மண்டல ஆய்வின் நோக்கமும் வெற்றி பெறும்” என்று பேசினார் முதலமைச்சர் ஸ்டாலின்.

மோனிஷா

கடைசி டி20: கோலியின் சாதனை முறியடிப்பு… சூப்பர் சதம் கண்ட சுப்மன் கில்

2023 பட்ஜெட்: தமிழகத்திற்கு திருக்குறள் கூட இல்லை – எம்.பி. ஜோதிமணி

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *