அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்ட சிறுமி டானியாவை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
அரியவகை முகச்சிதைவு நோய்
ஆவடியை அடுத்த மோரை, வீராபுரம் ஸ்ரீவாரி நகரைச் சேர்ந்த டானியா என்ற 9 வயது சிறுமி தற்போது 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
எல்லா குழந்தைகளும் போல 3 வயது வரை இயல்பாக வளர்ந்து வந்த டானியாவிற்கு 3 வயதுக்கு மேல் முகத்தில் சிறிய கட்டி தோன்றியது.
மருத்துவ பரிசோதனையில் டானியாவிற்கு அறிய வகை முகச்சிதைவு நோய் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவந்தது.
மேலும், டானியாவின் ஒரு பக்கம் முகம் சிதையத் தொடங்கியதால், டானியா மன உளைச்சலுக்கு ஆளாகினார்.
அறுவை சிகிச்சை செய்ய போதிய பணம் இல்லாததால் டானியாவின் பெற்றோர் அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டானியாவிற்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு உத்தரவிட்டார்.
அதன்படி கடந்த 23 ஆம் தேதி சிறுமி டானியாவுக்கு தனியார் மருத்துவமனையில் 8 மணி நேரம் அறுவை சிகிச்சை நடைபெற்றது.
நலம் விசாரித்த முதலமைச்சர்
தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பிலிருந்த சிறுமி டானியாவை நேற்று (ஆகஸ்ட் 29) இரவு முதலமைச்சர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
சிறுமியிடம், “முகத்தில் வலி இருக்கிறதா?, அனைத்தும் சரியாகிவிடும் தைரியமாக இரு, ஒரு வாரம் கழித்து ஸ்கூல் போறியா,
ஸ்கூல்க்கு போகணும்தானே கவலைப்படாத சீக்கிரம் ஸ்கூல் போகலாம், நான் மீண்டும் வந்து உன்னைச் சந்திக்கிறேன்” என்று ஆறுதல் கூறினார்.
இதனைத் தொடர்ந்து சிறுமியின் உடல் நலம் குறித்து மருத்துவர்களிடமும் கேட்டறிந்தார்.
இது குறித்து முதலமைச்சர் தனது ட்விட்டர் பதிவில், “சிறுமி டானியாவை அன்புடன் நலம் விசாரித்து, புன்னகையைப் பரிமாறிக் கொண்டேன்.
வலுவான நம்முடைய மருத்துவக் கட்டமைப்பால் இது சாத்தியமாகி உள்ளது. இந்தப் புன்னகையைவிட எது இன்றைய நாளை முழுமையாக்கியிருக்க முடியும்? நம் மருத்துவக் கட்டமைப்பைக் காத்து, புன்னகைகளைப் பரிசாகப் பெறுவோம்”.
மோனிஷா
ஸ்டாலின் தான் எங்க கடவுள்: டானியாவின் தாய் உருக்கம்!