சாலைப் பாதுகாப்பின் அவசியம் குறித்து இளம் வயது முதலே குழந்தைகள் அறிந்து கொள்ளும் வகையில் குட்டிக் காவலர் என்ற விழிப்புணர்வு திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(அக்டோபர் 12) தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொளி காட்சி வாயிலாக உயிர் அறக்கட்டளை சார்பில் கோவை மாவட்ட அளவிலான குட்டிக் காவலர் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
அத்துடன் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 4மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஊஞ்சல் என்ற இதழையும்,
6மற்றும் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேன்சிட்டு என்ற இதழையும், ஆசிரியர்களுக்கான கனவு ஆசிரியர் என்ற இதழையும் வெளியிட்டார்.
குழந்தைகளுக்கு சிறு வயது முதலே சாலைப் பாதுகாப்பின் அவசியம் குறித்து அறிய வைக்கவும், அவர்களை சாலைப் பாதுகாப்பின் தூதுவர்களாக மாற்றவும் உருவாக்கப்பட்டதே குட்டிக் காவலர் திட்டம்.
தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் சாலைப் பாதுகாப்பு குறித்து உறுதிமொழியை வாசித்தார்.
“நான் இன்று முதல் குட்டிக் காவலராக பொறுப்பேற்கிறேன். நான் எனது பயணத்தின்போது சாலை விதிகளை கடைப்பிடிப்பேன் என்றும்,
எனது உறவினர்களையும், நண்பர்களையும் சாலை விதிகளை பின்பற்றுமாறு அறிவுறுத்துவேன் என்றும் உறுதியேற்கிறேன்.
ஓடும் பேருந்தில் ஏறவோ, இறங்கவோ கூடாது என்பதை அறிவேன். இருசக்கர வாகனப் பயணத்தில் தலைக்கவசம் அணியவேண்டும் என்றும்,
நான்கு சக்கரப் பயணத்தில் இருக்கைப்பட்டை அணியவேண்டும் என்றும் உணர்த்துவேன்.
இந்த சாலைப் பாதுகாப்பு உறுதிமொழியை நான் முழுமையாகப் புரிந்துகொண்டு அதை உளமாறப் பின்பற்றுவேன் என்றும் உறுதிகூறுகிறேன்”.
இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்டத்தைச்சேர்ந்த 4.50லட்சம் மாணவர்கள் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் பொன் விழாவை முன்னிட்டு, கருணை அடிப்படையில் 75நபர்களுக்கு பணி நியமன ஆணையும்,
மற்றும் 586பணியாளர்களுக்கு பணி நிரந்தர ஆணைகளையும் முதலமைச்சர் வழங்க இருக்கிறார்.
கலை.ரா
அரசு ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் ஐடி ரெய்டு!
‘என் மீது எப்போதும் அன்பு வைத்திருந்தவர் கோவை தங்கம்’: முதல்வர் இரங்கல்!