Rs.2500 crore investment 1000 jobs
சரக்கு முனையங்கள், சரக்கு கையாளும் பூங்காக்களை அமைப்பதில் உலகளவில் முன்னணி நிறுவனமான ஹபக் லாய்டு நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் , ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தி வருகிறார்.
தமிழ்நாட்டின் பரவலான தொழில் வளர்ச்சிக்கு சரக்கு போக்குவரத்தினை கையாளும் வகையில், ஹபக் லாய்டு நிறுவனத்துடன் முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுகுறித்து இன்று (பிப்ரவரி 1) தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
“துறைமுகங்களைப் பயன்படுத்தி, சரக்குகளைக் கையாளும் கண்டெய்னர் துறைமுகங்கள், சரக்குப் போக்குவரத்து பூங்காக்கள் போன்ற கட்டமைப்பு வசதிகளை தமிழ்நாட்டில் அமைத்திட பல்வேறு முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகின்றது.
இத்துறைக்கான தனிக்கொள்கை ஒன்றும் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டது.
அந்த வகையில், சரக்கு முனையங்கள் மற்றும் சரக்கு கையாளும் பூங்காக்களை அமைப்பதில் உலகளவில் முன்னணி நிறுவனமாக திகழக்கூடிய ஹபக் லாய்டு (Hapag-Lloyd) நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரை தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது, தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து முதலமைச்சர் எடுத்துரைத்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இக்கூட்டத்தில், 2500 கோடி ரூபாய் முதலீட்டில், தூத்துக்குடி மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தளவாட வசதிகள் அமைத்திட இந்நிறுவனம் முன்வந்துள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இம்முதலீடு 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதோடு. தமிழ்நாட்டின் எதிர்கால தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
அதனைத் தொடர்ந்து, சாலை கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனமான Laura Berjano, International and Institutional Relations நிறுவனத்தின் தலைவரை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார்.
இச்சந்திப்பின்போது. இந்தியாவிலேயே அதிகமான சாலை அடர்த்தியும், தரமான சாலை கட்டமைப்பும் தமிழ்நாட்டில் உள்ளன என்பதையும், தொழில்வளர்ச்சியை ஊக்குவிக்கவும் இந்த சாலை கட்டமைப்பை மேலும் மேம்படுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தி, அபர்ட்டிஸ் நிறுவனம் தமிழ்நாட்டின் சாலைக் கட்டமைப்பில் மேலும் முதலீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தமிழ்நாட்டின் மாநில நெடுஞ்சாலை கட்டமைப்பில் முதலீடுகளை மேற்கொள்ளவும் அபர்ட்டிஸ் நிறுவனம் ஆர்வம் தெரிவித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 30ஆம் தேதி ஸ்பெயின் நிறுவனமான ரோக்கா நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.400 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் 200 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
24 ஆண்டுகளுக்கு பின் அஜித்துடன் இணையும் தபு
”பாரத ரத்னா விருது கொடுத்தாலும் வாங்கமாட்டேன்” : ராமதாஸ்
Rs.2500 crore investment 1000 jobs