டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை முதல் மிகக் கனமழை பெய்தது.
இதனால் அறுவடைக்குத் தயாராக இருந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் நெர்பயிகள் நீரில் மூழ்கிச் சேதமடைந்தன. இதனை அரசு கண்காணித்து முறையான இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

மழையால் ஏற்பட்ட பயிர் சேதங்கள் குறித்து வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் 2 அமைச்சர்கள் தலைமையில் ஆய்வு குழு அமைத்து அறுவடைக்குத் தயாராக இருந்து பயிர்களை ஆய்வு செய்து புள்ளிவிவரங்களைத் தாக்கல் செய்ய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
ஆய்வு மேற்கொண்டு சமர்ப்பிக்கப்படும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தான் இழப்பீடு தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து முதலமைச்சரிடம் பயிர் சேதம் குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், மழையினால் ஏற்பட்ட பயிர் சேதம் மற்றும் ஈரப்பத நெல் கொள்முதல் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதனிடையே காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த சம்பா பயிர்கள் பருவம் தவறிப் பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கியுள்ள காரணத்தால், நெல் கொள்முதல் விதிமுறைகளில் தேவையான தளர்வுகளை வழங்கிடுமாறு கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா