சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (ஓபி) நோயாளிகள் படுக்கையில் நாய்கள் ஹாயாக படுத்து உறங்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினமும் 1,500-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 750-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் உள்ளது.
இந்த மருத்துவமனையை அரசுடமையாக்குவதற்கு முன்பு தனியார் வசம் இருந்தபோது, சிகிச்சைகள் சிறப்பாக இருந்தது. ஆனால், 2011 – 16 அதிமுக ஆட்சிக்காலத்தில் அரசுடமையாக்கப்பட்ட பிறகு நாளுக்கு நாள் சிகிச்சை தரம் குறைந்து வந்தது என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

இந்தநிலையில், மருத்துவமனையில் உள்ள ஒரு பிளாக்கில் அதிகளவில் படுக்கைகள் இருந்தும் அதை பராமரிக்காததால், அதில் மக்கள் படுக்க முன் வராமல் மருத்துமனையிலேயே பாய் விரித்து தரையில் படுத்து வருகிறார்கள். இதனால் காலியாக உள்ள படுக்கையில் நாய்கள் இரவு, பகல் முழுவதும் ஹாயாக ஓய்வெடுக்கும் அறையாக மாறிவிட்டது. இந்த பிளாக்கை மருத்துமனைக்கு சிகிச்சை பெற சென்ற நோயாளி ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ வெளியானதும் அண்ணாமலை நகர் காவல்துறை ஆய்வாளர் அம்பேத்கர் மற்றும் அரசு மருத்துவமனை நிர்வாகமும் விசாரணை நடத்தினர். விசாரணையில், “இது பயன்படுத்தாத பில்டிங். அதனால் இந்த பில்டிங்கை நாங்கள் பூட்டி வைத்திருந்தோம்” என்று மழுப்பலாக பதிலளித்துள்ளனர்.
இதனால் டென்ஷனான விசாரணை அதிகாரிகள், “பூட்டி வைத்த பிளாக்கில் நாய் எப்படி வந்தது?” என்று கேட்டனர். மேலும், “இப்படி ஒரு பிளாக் இருக்கும் போது பக்கத்திலேயே புதிய கட்டிடம் கட்டி வருவது எதற்கு?” என கேட்டனர். இதற்கு மருத்துவமனை ஊழியர்கள் பதில் எதுவும் பேசாமல் மெளனமாக இருந்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் கூறும்போது, “நாய்கள் விளையாடும் பிளாக்கை பயன்படுத்தாத பில்டிங் என்று ஊழியர்கள் கூறுவது தவறு. அவர்கள் அந்த பிளாக்கை பராமரிக்கவில்லை. நன்றாக பராமரித்து படுக்கை வசதி ஏற்பாடு செய்திருந்தால், பொதுமக்களுக்கு மிகவும் வசதியாக இருந்திருக்கும்.
நோயாளிகள் அதிகமாக வரும்போது தரையிலோ, பாயிலோ படுக்க வேண்டிய நிலை ஏற்படாது. ஆனால், மருத்துவமனை வளாகத்தில் இன்னொரு பில்டிங் கட்டுகிறார்கள். அது யாருடைய லாபத்திற்காகவோ?” என்கிறார்கள்.
அரசு மருத்துவமனையை அனிமல்ஸ் படுக்கையறையாக மாற்றாமல், மக்களுக்கு பயன்படக்கூடிய இடமாக புதுப்பிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.