கடலூர் மாவட்டம் சிதரம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதை விசிக நிர்வாகி இளையராஜா வீடியோ எடுத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் வட்டம் வல்லம்படுக்கை சகஜானந்தா நகரில் வசிக்கும் விசிக முகாம் செயலாளர் இளையராஜா, கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி இரவு 9.15 மணிக்கு சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார்.
அப்போது ஆயிரம்கால் மண்டபம் அருகில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதை வீடியோ எடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தீட்சிதர்கள் அவரது கையை பிடித்து இழுத்து செல்போனை பிடுங்கினர். செல்போனை திரும்ப கொடுக்காததால் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் அன்றைய தினம் இரவு 10 மணியளவில் இளையராஜா புகார் அளித்தார்.
அந்த புகாரில், “அக்டோபர் 7-ஆம் தேதி இரவு 9.15 மணிக்கு சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றேன். அப்போது அங்கிருந்த சில தீட்சிதர்கள் ஆகம விதிகளுக்கு புறம்பாக கோவிலின் ஆயிரம்கால் மண்டபத்தின் கிழக்கு பகுதியில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தனர். அது எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது.
அதனால் எனது கைபேசியில் கிரிக்கெட் விளையாடுவதை படம் எடுத்தேன். அதைப்பார்த்த தீட்சிதர்கள் என்னை கடுமையாக் தாக்கி செல்போனை பிடுங்கினர். அடையாளம் தெரியாத ஐந்து தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை வட்டாரத்தில் நாம் விசாரித்தோம்…
“அக்டோபர் 9-ஆம் தேதி இரவு டூட்டியில் இருந்த காவல் அதிகாரி புகாரைப் பெற்றுக்கொண்டு, இதுபோன்று புகார் கொடுக்கக்கூடாது. உண்மையை மட்டும் சொல்லுங்கள். ஏன் கோவிலுக்கு சென்றீர்கள்? அந்த நேரத்தில் என்ன வேலை? கிரிக்கெட் விளையடினார்களா? அதை ஏன் வீடியோ எடுத்தீர்கள்? என கேட்டிருக்கிறார். இதற்கு இளையராஜா அளித்த பதிலை ரகசியமாக வீடியோ பதிவு செய்தார்.
அதன்பிறகு, இளையராஜாவிடம் வேறு ஒரு புகாரை பெற்றுக்கொண்டு, எதிர்தரப்பான தீட்சிதர் ஸ்ரீவர்ஷனை தொடர்புகொண்ட காவல் நிலைய அதிகாரி, உங்கள் மீது புகார் வந்துள்ளது. அந்த செல்போனை எடுத்துக்கொண்டு ஸ்டேஷனுக்கு வாருங்கள் என்று அழைத்தார்.
ஸ்ரீவர்ஷனுடன் சில தீட்சிதர்கள் காவல் நிலையத்திற்கு வந்தனர். இளையராஜாவிடம் பிடுங்கிய செல்போனை காவல் நிலைய அதிகாரி இளையராஜாவிடம் ஒப்படைத்தார். பின்னர், அந்த செல்போனில் கிரிக்கெட் விளையாடிய வீடியோவை போலீஸ் அதிகாரி தீட்சிதருக்கு ஷேர் செய்துவிட்டு அவர்களை அனுப்பி வைத்துவிட்டார்.
இளையராஜா கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று நேற்று (அக்டோபர் 8) சிதம்பரம் நகர காவல் நிலையம் முன்பு திமுக கூட்டணி கட்சிகளான விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திராவிடர் கழகம், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தினர். பின்னர் அன்றைய தினம் மாலையில் சிதம்பரம் கஞ்சித்தொட்டி அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த விஷயம் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு சென்றது. அவர்களது அறிவுறுத்தலின்படி, தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. குற்ற எண் 380/24 செக்ஷன் 191 (1), 296 (பி), 115 (1), 351 (2) பிஎன்எஸ் என்ற பிரிவின் கீழ் அடையாளம் தெரியாத ஐந்து தீட்சிதர்கள் என்று குறிப்பிட்டுள்ளனர்” என்கிறார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக கடலூர் விசிக கிழக்கு மாவட்ட செயலாளர் தமிழ் ஒளியை தொடர்புகொண்டு கேட்டோம்…
“நேற்று முன்தினம் நடராஜர் கோவிலில் கிரிக்கெட் விளையாடிய தீட்சிதர்களை வீடியோ எடுத்த எங்கள் கட்சி நிர்வாகி இளையராஜாவை இழிவுபடுத்தி, கடுமையாக தாக்கி செல்போனை பிடுங்கியிருக்கிறார்கள். அவர்கள் மீது புகார் கொடுத்தால் புகாரை மாற்றி வாங்குகிறார்கள். புகார்தாரரை மிரட்டும் தொனியில் பேசிய காவல் அதிகாரி, அதை வீடியோ எடுத்துள்ளார்.
மேலும், குற்றவாளியை காவல் நிலையத்திற்கு அழைத்து இளையராஜாவிடம் பறிமுதல் செய்த செல்போனையும் வாங்கிக்கொண்டு, அந்த செல்போனில் இருந்த வீடியோ காட்சிகளை தீட்சிதர்களுக்கு ஷேர் செய்துள்ளனர். கைது செய்ய வேண்டிய தீட்சிதர்களை மரியாதையாக வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அதற்கு பரிகாரமாக காவல் அதிகாரிக்கு தீட்சிதர்கள் விபூதி கொடுத்துள்ளனர்.
தீட்சிதர்கள் மீதான இந்த வழக்கு என்பது புதிதல்ல. கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி கோவையை சேர்ந்த ரம்யாவிடம் கனக சபை மீது ஏற 200 ரூபாய் கட்டணம் கேட்டு மிரட்டிய தீட்சிதர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு முன்பு கோவிலுக்கு வந்த ஜெய விஷ்ணு தாக்கப்பட்ட சம்பவம், 2019-ல் அரசு செவிலியர் லதா என்பவர் தனது மகன் பிறந்தநாளுக்கு அர்ச்சனை செய்வதற்கு கோவிலுக்கு வந்தபோது தீட்சிதர் ஒருவர் லதா கன்னத்தில் அறைந்துள்ளார். இதுதொடர்பாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தங்களது உரிமைகளுக்காக ஸ்ரீபெரும்புதூரில் போராடும் சாம்சங் நிறுவன தொழிலாளர்களை அநியாயமாக கைது செய்யும் காவல்துறை, சிதம்பரம் கோவிலில் அநியாயம் செய்யும் தீட்சிதர்களை கைது செய்வதில் ஏன் தயக்கம் காட்டுகிறது. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா?” என ஆதங்கமாக கேட்கிறார்.
இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா, “சிதம்பரம் கோவிலில் கிரிக்கெட் விளையாடினால் என்ன தப்பு? அவர்கள் என்ன கர்ப்ப கிரகத்திலா விளையாடினார்கள்?” என்று தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேட்டையன் படத்துக்கு சிறப்பு காட்சி… விடுமுறை அளித்த ஆபிஸ்!
“சாம்சங் ஊழியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்”… எடப்பாடி வலியுறுத்தல்!