கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதை விசிக நிர்வாகி இளையராஜா வீடியோ எடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஐந்து தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிதம்பரம் கோவிலில் கிரிக்கெட் விளையாடிய தீட்சிதர்கள்… நடவடிக்கை எடுக்க தயங்கியதா போலீஸ்? என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் இன்று (அக்டோபர் 9) விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்த செய்தியை படித்த சிதம்பரம் கோவில் தீட்சிதர் மணிவாசகம் நம்மை தொடர்புகொண்டார். அவர் நம்மிடம் கூறியபோது, “சிதம்பரம் நடராஜர் கோவிலில் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை சிறுவர்கள் மந்திரம் கற்றுக்கொள்ள வருவார்கள். 8 மணிக்கு பிறகு கோவிலில் சிறிது நேரம் கபடி அல்லது கிரிக்கெட் விளையாடுவார்கள்.
அப்படி விளையாடிக்கொண்டிருக்கும் போது, இளையராஜா என்ற நபர் பிரச்சனை செய்ய வேண்டுமென்றே வீடியோ எடுத்திருக்கிறார். அனுமதி இல்லாமல் வீடியோ எடுத்ததால் அவரிடம் இருந்து செல்போனை வாங்கியிருக்கிறார்கள். கோவிலில் சிறுவர்கள் விளையாடுவதில் என்ன தவறு? தீட்சிதர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியபோது மிகவும் இழிவான வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கிறார்கள்” என்றார்.
காவல்துறை தரப்பில், “கோவிலில் சிசிடிவி கேமரா இருக்கிறது. அதில் பதிவான காட்சிகளை தீட்சிதர்கள் தரப்பில் கொடுத்திருக்கிறார்கள். அந்த காட்சிகளில் இளையராஜாவை தீட்சிதர்கள் தாக்குவது போன்ற காட்சிகள் இல்லை. இளையராஜா கொடுத்த வாக்குமூலத்தை வீடியோவாக பதிவு செய்து, அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்திருக்கிறோம்” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வீட்டுக்குள் ஊழல்வாதி… மாட்டி விட்ட கணவர்- தெலங்கானாவில் இந்தியன் 2 எஃபக்ட்ஸ்!
ஆசிரியர்கள் போராட்டம்: ஊதியம் விடுவிக்கப்படும்… உதயநிதி உறுதி!