நடராஜர் கோயில் விவகாரம்: பதில் கடிதம் அனுப்பிய தீட்சிதர்கள்!

தமிழகம்

”சிதம்பரம் நடராஜர் கோயில் சம்பந்தமான விபரங்களை, வரும் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்” என இந்து அறநிலையத் துறை எழுதியுள்ள கடிதத்துக்கு கோயில் தீட்சிதர்கள் பதில் கடிதம் எழுதியுள்ளனர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சொத்துகள் மற்றும் நகைகள் உள்ளிட்ட கணக்குகளை ஆய்வு செய்ய இந்து சமய அறநிலைய துறை அனுமதி கேட்டபோது, நடராஜர் கோயில் தீட்சிதர்கள் ஆய்வுக்கு ஒத்துழைக்க மறுத்தனர்.

அதன்பிறகு, கடந்த 2005ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை கணக்குகளை சரிபார்க்க ஒப்புதல் அளித்தனர். அதன் அடிப்படையில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் கொண்ட குழு, கடந்த சில நாட்களுக்கு முன் நடராஜர் கோயிலில் உள்ள சொத்து விவரங்கள் மற்றும் நகைகளை ஆய்வு செய்தனர்.

இதன் அடுத்தகட்டமாக, கடந்த1950ஆம் ஆண்டு முதல் 2005-ம்ஆண்டு வரை உள்ள சொத்துகள் மற்றும் ஆபரணங்கள் கணக்குகளை ஆய்வு செய்ய அறநிலைய துறை கடிதம் அளித்தது. இதற்கு கோயில் தீட்சிதர்கள் மறுத்து விட்டனர்.

chidambaram dikshidars reply letter

இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் நடராஜர் கோயில் தீட்சிதர்களின் செயலாளருக்கு கடிதம் ஒன்று எழுதியிருந்தார்.

அதில், “நடராஜர் கோயில், தீட்சிதர்கள் சமுதாயத்தினால் மக்களின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்டதற்கான ஆதாரம், தீட்சிதர்களின் சொந்த நிதியில் இருந்து கோயில் பராமரிக்கப்பட்டு வருவதற்கான ஆதாரங்கள், தீட்சிதர்களின் சொந்த நிதியில் இருந்து தினசரி பூஜை மற்றும் திருவிழாக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதற்கான ஆதாரங்கள்,

கோயிலில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு முறையில் நன்கொடைகள் பெற்று தினசரி பூஜை மற்றும் பராமரிப்பு மேற்கொள்ளப்படுகிறது என்றால் அது குறித்த வரவு – செலவு கணக்குகள், கோயில் அமைந்துள்ள இடத்தின் நில உரிமை குறித்த வருவாய் துறை ஆவணங்கள், நில உரிமை இறைவன் பெயரில் இருப்பின் மேற்கண்ட நிலம் மன்னர்களால் அல்லது அரசால் இறைவனுக்கு வழங்கப்பட்டதா அல்லது தீட்சிதர்களால் இறைவன் பெயரில் வழங்கப்பட்டதா என்பதற்கான ஆவணங்களை வரும் 15ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

தவறும்பட்சத்தில் தங்களால் அளிக்கக் கூடிய விவரங்கள் எதுவும் இல்லை; அடிப்படை ஆவணங்கள் எதுவும் இன்றி ஊடகங்களில் தவறான தகவல்கள் தங்களால் அளிக்கப்பட்டு வருகிறது என முடிவு செய்யப்பட்டு, இந்து சமய அறநிலையத் துறை கொடைகள் சட்டம் மற்றும் அதன்கீழ் ஏற்படுத்தப்பட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துக்கொள்கிறோம்” என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

chidambaram dikshidars reply letter

இந்த நிலையில், சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள், அறநிலையத்துறையின் கடிதத்திற்கு பதில் அளிக்கும் விதமாக கடிதம் அனுப்பியுள்ளனர். அந்த கடிதத்தில், ”2000 ஆண்டுகளுக்கும் மேலாக மண்ணின் மைந்தர்களாக விளங்கும் பண்டையக்கால முன் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பொது தீட்சிதர்கள்.

இச்சமூகத்தின் அடிப்படை சமய நிர்வாக மற்றும் கலாச்சார உறுதிகளை பாதுகாக்குமாறு அரசாங்கத்திடமும் அதன் அதிகாரிகளிடமும் கோரிக்கை வைக்கிறோம். சபாநாயகர் கோயில் நிர்வாகத்தில் சட்டத்திற்கு புறம்பாக ஏதேனும் நடவடிக்கை எடுத்தாலோ அல்லது ஏதேனும் உத்தரவு பிறப்பித்தாலோ அது எங்களை கட்டுப்படுத்தாது.

அது நீதிமன்ற அவமதிப்பிற்கு சமமாகும். எங்கள் வழக்கறிஞர்களின் சட்ட ஆலோசனை படிவங்களைப் பெற்ற பிறகு உங்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பிற்கு வழக்கு தொடர்வோம்.

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை அரசு கையகப்படுத்தும் முயற்சிகளில் மட்டுமே ஈடுபட்டு வருகிறது. இந்த கடிதத்திற்கு பிறகு எந்தவித பதில் கடிதமோ அல்லது எந்தவித தொடர்போ அறநிலைத்துறையுடன் எங்களுக்கு இருக்காது” என அதில் தெரிவித்துள்ளனர்.

ஜெ.பிரகாஷ்

சென்னையில் மழை: வெதர்மேன் கொடுத்த அப்டேட்!

பாகிஸ்தானா, துப்பாக்கிஸ்தானா? இம்ரான் கான் மீது தாக்குதல்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *