என்னதான் வெளியிடங்களில் விருந்தே சாப்பிட்டாலும் வீட்டில் சாப்பிடும் குழம்பு போல் வருமா? எளிமையாக செய்யக்கூடிய இந்த செட்டிநாட்டு சிக்கன் குழம்பு, ஆளை அசத்தும். இந்தக் குழம்பு மிகவும் கெட்டியாக இல்லாவிட்டாலும், மிக ருசியாக இருக்கும். செட்டிநாட்டுத் திருமணங்களில், காலை விருந்தில் இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்ள இந்தக் குழம்புதான் சைடிஷ்.
என்ன தேவை?
சிக்கன் – கால் கிலோ
பெரிய வெங்காயம் – ஒன்று
தக்காளி – இரண்டு
மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன்
தனியா (மல்லி) தூள் – ஒன்றரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க…
எண்ணெய் – 2 டீஸ்பூன்
சோம்பு – அரை டீஸ்பூன்
பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா ஒன்று
கறிவேப்பிலை – சிறிதளவு.
எப்படிச் செய்வது?
சிக்கனை நன்கு அலசிக் கழுவி, துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம், தக்காளியை நறுக்கவும். குக்கரை அடுப்பில் வைத்து, சிக்கன் துண்டுகள், நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய்த்தூள், தனியா தூள், மஞ்சள் தூள், இஞ்சி – பூண்டு விழுது, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து, மூடிவைக்கவும். இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். ஒரு கடாயில் எண்ணெயைக் காயவிட்டு, சோம்பு, பட்டை, லவங்கம், ஏலக்காய் ஆகியவற்றைத் தாளித்து, குழம்பில் சேர்க்கவும். அப்படியே ஒரு கொதி கொதிக்கவிட்டு இறக்கவும்.
கிச்சன் கீர்த்தனா: பட்டர் சிக்கன் மசாலா
கிச்சன் கீர்த்தனா: லீன் அன்ட் லைட் சாலட்