செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கு வசதியாக 3500 உணவுகள் அடங்கிய 77 வகையான மெனு கார்டுகள் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை நேரு உள் விளையாட்டு அரங்கில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குகிறது. ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறும் நிகழ்ச்சிக்காக அரசு பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்துள்ளாது.
குறிப்பாக, வெளிநாட்டு வீரர்களுக்கு அவர்களின் சொந்த நாட்டு உணவுகளுடன் பல்வேறு நாட்டு உணவுகளையும் வழங்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக 77 வகையான மெனு கார்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. அதில் தின்பண்டங்கள், சிற்றுண்டிகள் உட்பட 3500 க்கும் மேற்பட்ட உணவுகள் இடம்பெற்றுள்ளன. இது தவிர, 700 வகையான முக்கிய உணவுகள் உள்ளன. வீரர்களுக்கான காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு மற்றும் உயர்தர தேநீர் தயாரிக்க சிறந்த சமையல் கலைஞர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இந்த உணவு ஏற்பாடுகளை இந்தியாவின் முன்னணி சமையல் நிபுணரும், சென்னையைச் சேர்ந்தவருமான ஜி.எஸ்.தல்வார் (75) மேற்பார்வையில் தயாரிக்கப்பட உள்ளது.
வீரர்களுக்கு வழங்கப்படும் மெனுக்கள், சூப், ஜூஸ்கள், ஸ்டார்டர்கள், முக்கிய உணவுகள், சிற்றுண்டிகள், சாலடுகள் ஆகியவற்றின் பட்டியலைத் தயாரிக்க ஒரு வார காலம் எடுத்துக்கொண்டதாக தல்வார் கூறியுள்ளார்.
இங்கு தயாரிக்கப்படும் ஒவ்வொரு உணவும் வெவ்வேறு சுவையைக் கொண்டிருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இதனால் வீரர்கள் ஒரு நாள் சாப்பிடும் உணவுகள் மறுநாள் அதே போன்று இருக்காது. மெனுவில் சிறப்பு ஒயின்கள் மற்றும் பீர்களும் இடம்பெற்றுள்ளன. மெனுவில் உள்ள உணவு வகைகள் இந்தியா, ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உணவு பட்டியலை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் இது ஒரு செஸ் ஒலிம்பியாட் மட்டுமல்ல, ஒரு பெரிய உணவு திருவிழாவாகவும் இருக்கும் என்கிறார் செஃப் தல்வார்.