நேற்று (நவம்பர் 5) இரவு சென்னையிலிருந்து புறப்பட்ட சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் திருவள்ளூர் அருகே சென்றுகொண்டிருந்த போது, ரயிலின் இரண்டு பெட்டிகள் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் ஏற்பட்ட விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நேற்று இரவு 10 மணிக்கு சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இரவு 11 மணியளவில் ரயில், திருவள்ளூர் ரயில் நிலையத்தில் 4-வது நடைமேடையில் சென்று கொண்டிருந்தபோது, இரண்டு பெட்டிகளை இணைக்கும் இணைப்பு கொக்கி துண்டிக்கப்பட்டது.
எஸ் 7 மற்றும் எஸ் 8 ஆகிய 2 பெட்டிகள் துண்டிக்கப்பட்டதால் பயங்கர சத்தம் கேட்டது. இதனால் ரயிலில் இருந்த பயணிகள் அலறி அடித்துக்கொண்டு என்ன ஆனது என உயிர் பயத்தில் கீழே இறங்கினர். இணைப்பு கொக்கி துண்டிக்கப்பட்டவுடன் ஓட்டுநர் ரயிலை நிறுத்தியுள்ளார்.
உடனடியாக திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இரவு பணியில் இருந்த ஊழியர்கள் ரயில் பெட்டிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் ரயிலில் பயணித்த பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர்.
பெரம்பூர் கேரேஜ்-ல் இருந்து இணைப்பு கொக்கிகள் புதியதாக வரவழைக்கப்பட்டு, ரயில்வே ஊழியர்கள் பெட்டிகளை இணைத்தனர்.
3 மணி நேரத்திற்கு பின் சேரன் எக்ஸ்பிரஸ் அரக்கோணம் வழியாக கோவைக்கு புறப்பட்டு சென்றது. ரயில் ஓட்டுநரின் துரிதமான நடவடிக்கையால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் தனித்தனியாக பிரிந்த விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தென்னக ரயில்வே இன்று (நவம்பர் 6) தெரிவித்துள்ளது.
செல்வம்
படமா? நிஜமா? – காரில் கெத்தாக வலம் வந்த பவன்
ஆர்.எஸ்.எஸ் பேரணி – பின்வாங்கிய காரணம் இதுதான்: திருமாவளவன்