இயக்குநர் சேரன் மீது தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் கடலூர் காவல் நிலையத்தில் இன்று (ஆகஸ்ட் 15) புகார் அளித்துள்ளனர்.
ஆகஸ்ட் 13-ஆம் தேதி, இயக்குநர் சேரன் சென்னையில் இருந்து கடலூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். புதுச்சேரியைத் தாண்டி கடலூரை நோக்கி சென்றுகொண்டிருக்கும் போது, சேரனின் காருக்கு பின்னால் வந்த தனியார் பேருந்து ஒன்று தொடர்ந்து ஹாரன் அடித்து கொண்டே வந்துள்ளது.
இதனால் எரிச்சலடைந்த சேரன் காரை நடுரோட்டில் நிறுத்தி, அதிலிருந்து இறங்கிவந்து பேருந்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஆனால், சிறிது நேரம் கழித்து, போலீசில் புகார் ஏதும் அளிக்காமல், சேரன் கிளம்பிச் சென்றுவிட்டார். இந்த தகவல் கடலூர் எஸ்.பி.ராஜாராமிற்கு தெரியவந்து, அவர் சம்பந்தப்பட்ட ஆர்.டி.ஓ வை தொடர்புகொண்டு, தனியார் பேருந்துகளின் ஹாரன்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக பேசியிருக்கிறார்.
இதனையடுத்து, தனியார் பேருந்துகள் ஏர் ஹாரன் பயன்படுத்துவதாகச் சொல்லி, ஒவ்வொரு பேருந்தின் மீதும் காவல்துறையினர் ரூ.10,000 அபராதம் விதித்ததாகச் சொல்லப்படுகிறது.
இது சம்பந்தமாகத் தனியார் பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகள், “நடு ரோட்டில் காரை நிறுத்தி சேரன் வாக்குவாதம் செய்தது தவறு. நியாயமாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்க வேண்டும். மேலும், தாங்கள் பயன்படுத்துவது எலக்ட்ரானிக் ஹாரன்தான், ஏர் ஹாரன் கிடையாது” என்று கடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை : 14 முக்கிய அம்சங்கள்!
சூர்யா ஷூட்டிங்கில் அனுமதியின்றி ரஷ்யர்கள், ஆப்கானியர்கள்… வெடிக்கும் சர்ச்சை! – பின்னணி என்ன?