புதிதாக கட்டும் வீட்டிற்கு கால்கோள் விழாவில் கலந்துகொள்ள அனுமதி கேட்டும் விடுமுறை தராததால் மன உளைச்சலுக்கு உள்ளான சென்னையைச் சேர்ந்த போக்குவரத்து எஸ்.ஐ ஒருவர் வருத்தத்துடன் பேசிய ஆடியோ தமிழக போலீசாரின் மனநிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
சென்னை பரங்கிமலை எஸ்1 மவுண்ட் போக்குவரத்து காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக உள்ளவர் மணிமாறன்.
இவர் கடந்த 27ம் தேதி தான் புதிதாக கட்டி வரும் வீட்டிற்கு வாசல் கால் வைக்கும் அதாவது புது வீட்டுக்கு நிலைப்படி வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க விடுமுறை கேட்டிருந்தார்.
ஒருநாள் முன்னதாக மவுண்ட் உட்கோட்ட உதவி ஆணையாளருக்கு விடுப்பு கடிதம் முறைப்படி அனுப்பியும் விடுப்பு கொடுக்கவில்லை. வீட்டு விசேஷத்தில் கலந்துகொள்ள சில மணி நேரம் பர்மிஷன் கேட்டும் கொடுக்கவில்லை.

மேலும் மணிமாறனை அவரது வீட்டு விசேஷத்தன்று (கடந்த 27ம் தேதி) பணி செய்யவும் வற்புறுத்தியுள்ளனர்.
இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான மணிமாறன், தனக்கு நேர்ந்த வலியை ஆடியோ பதிவு மூலம் வெளியிட்டுள்ளார்.
அதில், “ஆய்வாளர் வெங்கடேசன், உதவி ஆணையர் திருவேங்கடம் ஆகியோர் வேண்டுமென்றே காழ்ப்புணர்ச்சி காரணமாக எனக்கு விடுப்பு தரவில்லை.
என்னுடைய வளர்ச்சியை தடுக்கும் எண்ணத்தில் கட்டுப்பாட்டு அறையில் எனக்கு ஆப்செண்ட் போடுகின்றனர்.
இந்த மாறி அதிகார துஷ்பிரயோக அதிகாரிகளால் தான் பணிச்சுமையும், மன அழுத்தங்கள் அதிகரித்து காவல் துறையினர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் சாலையில் போக்குவரத்தும் அதிகமில்லை. விஐபி போக்குவரத்தும் கிடையாது.
அப்படி இருக்கும் போது, அதிகாரி என்ற ஆயுதத்தை என்னை போன்ற கீழ்நிலை ஊழியர்கள் மீது தவறா பயன்படுத்துறாங்க.

விடுப்பு தராததோடு மைக்கில் அநாகரிகமாக பேசுகின்றனர். இது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறையின் இதுபோன்ற அடக்குமுறை எப்போதுதான் நிற்கும் என்று தெரியவில்லை.
காவல்துறை என்ற குடும்பத்தை கவனித்துக்கொள்ள கூடாதா? குடும்பத்தை பார்த்துக்கொள்ளாமல் வேலை செய்யவேண்டும் என்றால் அது என்ன வேலை?
அதிகாரி என்றாலே சார்ஜ் தரணும் என்ற அகம்பாவத்தோடும், ஆணவத்தோடும் மனசாட்சி இன்றி சிலர் உள்ளனர். இது மனிதாபிமானமில்லாத அடக்குமுறை.
இதுமாதிரியான அடக்குமுறை அதிகாரிகள் உள்ளவரை காவல்துறையில் தற்கொலை தொடரும். இந்த நிலை மாறணும் சார் ” என்று உருக்கமுடன் ஆடியோ வெளியிட்டுள்ளார்.
காவலர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பலகாலமாக இருந்து வருகிறது. இதனையடுத்து காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும் எனத் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தார்.

எனினும் அந்த உத்தரவு சரியாக பின்பற்றப்படவில்லை என்றும், காவல்துறையில் உயர் அதிகாரிகள் தங்களுக்கு விடுமுறை அளிக்காததால் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
ஐயா அதிகாரிகளே, போலீஸ் மணிமாறன் வீட்டு கிரகப்பிரவேசத்திற்காகவது அவருக்கு லீவு கொடுப்பீர்களா?
வணங்காமுடி
கத்தார் : குவியும் ரசிகர்கள்… கொடுமையில் ஒட்டகங்கள்… பீட்டா யார் பக்கம்?