வேகக் கட்டுப்பாடு மீறல்: முதல் நாளில் 121 வழக்குகள்… ரூ.1.21 லட்சம் அபராதம்!

Published On:

| By christopher

chennai traffic police fine for speed limit

சென்னையில் அனைத்து வாகனங்களுக்கான புதிய வேகக் கட்டுப்பாடு நேற்று (நவம்பர் 4) முதல் அமலுக்கு வந்தது. அதன்படி வேக வரம்பை மீறியதாக முதல் நாளிலேயே ரூ.1.21 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை சாலைகளில் போக்குவரத்து நெருக்கடியும், சாலை விதிமீறல்களும் அதனால் ஏற்படும் விபத்துகளும் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனை கட்டுப்படுத்த சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக புதிய வேகக்கட்டுப்பாடு சென்னை மாநகரில் நேற்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதன்படி இருசக்கர வாகனங்கள் அதிகப்பட்சமாக 50 கி.மீ வேகத்திலும்,

கார், மினி வேன் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் 60 கி.மீ வேகத்திலும்,

பேருந்து, லாரி, டிரக்குகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் 50 கி.மீ வேகத்திலும், ஆட்டோக்கள் மணிக்கு 40 கி.மீ வேகத்திலும் செல்ல வேண்டும்.

குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வாகனங்களும் 30 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என்று புதிய வேகக் கட்டுப்பாடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த வேக கட்டுப்பாட்டை மீறும் வாகனங்களுக்கு மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது.

இதற்காக நவீன ஸ்பீடு ரேடார் கன் கருவிகள் கிழக்கு கடற்கரை சாலை, சென்ட்ரல், அண்ணா சாலை, மதுரவாயல், பாரிமுனை சந்திப்பு, ஸ்பென்சர் சந்திப்பு உள்ளிட்ட நகரின் முக்கியமான பல பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளன

வாகனங்களுக்கான இந்த புதிய வேகக்கட்டுப்பாடு நேற்று முதல் அமலுக்கு வந்ததையடுத்து நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை மீறி செல்லும் வாகனங்களுக்கு போக்குவரத்து காவல்துறையினர் நகரின் பல இடங்களில் அபராதம் விதித்தனர்.

அதன்படி நேற்று முதல் நாளிலேயே புதிய வேகக்கட்டுபாட்டை மீறிய 4 கார்கள் மற்றும் 117 இருசக்கர வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு,  அதன் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.1000 வீதம் 1.21 லட்சம் ரூபாய் அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இதுபோன்று வேகமாக இயக்கினால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும்  அபராதம் செலுத்திய உரிமையாளர்களிடம் சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ICC World Cup : அரையிறுதிக்கு போட்டி போடும் 6 அணிகள்.. வாய்ப்புகள் என்ன?

முதல் கருப்பு ஹீரோவாக ராகவா லாரன்ஸ்.. ஜிகர்தண்டா 2 ட்ரெய்லர் எப்படி?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel