தூத்துக்குடியிலிருந்து சென்னைக்குச் செல்லும் விமான டிக்கெட்டின் தொகைக்கு, சிங்கப்பூருக்கே சென்று வந்துவிடலாம்” என திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை ஆகிய இடங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த இடங்களுக்கு தற்போது பயணிகள் பலர் சென்று வருகிறார்கள். சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை ஆகிய இடங்களுக்கு செல்ல வழக்கமாக ரூ.4,500 கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால், கடந்த மார்ச் மாதம் மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கத்தினர் நடத்திய போராட்டம் காரணமாக சென்னையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு விமான டிக்கெட் விலை கடுமையாக உயர்ந்தது. குறிப்பாக, சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு செல்ல விமான கட்டணம் ரூ.10 ஆயிரத்தை நெருங்கியது.
இந்த நிலையில், இன்று (செப்டம்பர் 8) தூத்துக்குடியிலிருந்து சென்னை செல்வதற்கு விமானம் ஒன்றில் ரூ.17,748 வசூலிக்கப்பட்டிருக்கிறது. இன்று காலை 7.30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்ட விமானத்தில்தான் இந்த தொகை வசூலிக்கப்பட்டிருக்கிறது. அதுபோல் இன்று 11.20 மணிக்கு புறப்பட்ட விமானத்தில் ரூ.20,665 வசூலிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா, இன்று (செப்டம்பர் 8) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்த விமான டிக்கெட்டையும் இணைத்து, “இந்த ரூபாய்க்கு சிங்கப்பூருக்கே சென்று வந்துவிடலாம்” எனக் குறிப்பிட்டிருக்கும் அவர், ”இந்த டிக்கெட் விலை உயர்வால் ஏன் மாநில அரசே விமானச் சேவையை தொடங்கக்கூடாது. PeriAir என்ற பெயரே நன்றாக இருக்கிறது. அந்தப் பெயரில் ஏன் விமானச் சேவை இருக்கக்கூடாது” என கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், ”தமிழ்நாட்டில் சமத்துவ வளர்ச்சிப் பாதைக்கு சிறகுகள் கொடுத்தவர் பெரியார்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்