தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று (அக்டோபர் 22) கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தீப திருநாளாம் தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் அக்டோபர் 24 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இதையொட்டி சென்னையில் வசிக்கும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் நேற்றிலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.
இதனால், நேற்று இரவில் தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, பரனூர் டோல்கேட் போன்ற பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இரண்டாவது நாளான இன்றும் ஏராளமானோர் தங்களின் ஊர்களுக்கு பயணிப்பதால் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் முதல் கூடுவாஞ்சேரி வரை 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளன.
இத்தகைய தொடர் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும், தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு ஏதுவாக தாம்பரம் சானடோரியம், தாம்பரம் ரயில் நிலையம் அருகே சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதன் காரணமாக தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் போக்குவரத்து நெரிசல் கட்டுக்கடங்காமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளுக்கு தாமதம் ஏற்படுகிறது என்று போலீசார் விளக்கமளித்துள்ளனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
56 வயதில் 23 வயது பெண்ணுடன் திருமணம்: நடிகர் பப்லு சொல்லும் விளக்கம்!
”நீங்களா! எனக்கு வேண்டவே வேண்டாம்!”: மணமகள் கொடுத்த விளம்பரத்தால் அதிர்ச்சி!