லிஃப்டில் சிக்கிய அமைச்சர்: பொறியாளர்கள் பணி நீக்கம்!
ஸ்டான்லி மருத்துவமனையில் மின் தூக்கிகளை சரியாகப் பராமரிக்காத காரணத்தால் 2 பொறியாளர்களைத் தற்காலிக பணி நீக்கம் செய்து பொதுப்பணித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கை அறுவை சிகிச்சைச் சிறப்பு மேற்படிப்பு துவக்கம் மற்றும் புனரமைக்கப்பட்ட நூற்றாண்டு நிர்வாக கட்டட அலுவலகம் திறப்பு விழாவிற்கு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நவம்பர் 29 ஆம் தேதி சென்றார்.
மா. சுப்பிரமணியன் உடன் வந்தவர்களுடன் மின்தூக்கியில் செல்லும்போது, பாதி வழியில் பழுதடைந்து நின்று விட்டது.
இது தொடர்பாக அமைச்சர் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளிடம் விசாரிக்கும் போது இது போன்று அடிக்கடி மின்தூக்கி பழுதடைந்து விடுகிறது எனத் தெரிவித்தனர்.
மின்தூக்கியை முறையாகப் பராமரிக்காததே இதற்குக் காரணம் என்றும் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இதற்குப் பொறுப்பான பொதுப்பணித்துறை உதவிச் செயற்பொறியாளர் டி.சசிந்தரன், மற்றும் உதவிப் பொறியாளர் வி.கலைவாணி ஆகிய இருவரையும் உடனடியாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து பொதுப்பணித்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கை அறுவை சிகிச்சைச் சிறப்பு மேற்படிப்பு துவக்கம் மற்றும் புனரமைக்கப்பட்ட நூற்றாண்டு நிர்வாக கட்டட அலுவலகம் திறப்பு விழாவிற்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் பங்கேற்க நவம்பர் 29 அன்று அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
அமைச்சருடன், நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் பி.செந்தில்குமார், மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜி, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி மற்றும் சிலர் உடன் சென்றுள்ளனர்.
மின்தூக்கியில் செல்லும்போது, மின்தூக்கியைப் பராமரிக்க வேண்டிய பொறியாளர்களின் கவனக்குறைவாலும், சரிவர பராமரிக்காததாலும் பாதி வழியில் பழுதடைந்து நின்று விட்டது.
இது தொடர்பாக அமைச்சர், மருத்துவமனையில் நோயாளிகளிடம் விசாரித்த வகையில் இதுபோன்று அடிக்கடி மின்தூக்கி பழுதடைந்து விடுகிறது எனத் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, இதற்குப் பொறுப்பான பொதுப்பணித்துறை உதவிச் செயற்பொறியாளர் டி.சசிந்தரன், மற்றும் உதவிப் பொறியாளர் வி.கலைவாணி ஆகிய இருவரும் உடனடியாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், பொதுப்பணித்துறை முதன்மைத் தலைமைப் பொறியாளர், இனிவரும் காலங்களில் இதுபோன்று நிகழ்வுகளைத் தவிர்க்கும் பொருட்டு, விரிவான சுற்றறிக்கை ஒன்றினை அனைத்து மின் பொறியாளர்களுக்கும் அனுப்பியுள்ளார்.
அதில், மருத்துவமனைகளில் உள்ள மின்தூக்கிகள் மற்றும் இதர மின் சாதனங்கள் சரியாக இயங்குவதைச் சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரி முதல்வர்களுடன் இணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது,
மோனிஷா
சேவல் கூவுகிறது : புகார் கொடுத்த ‘மோடி’
“ஜல்லிக்கட்டு பாக்க வாங்க” : நீதிபதிகளுக்கு தமிழக அரசு அழைப்பு!