chennai st thomas mount metro rail parking closed

பார்க்கிங் மூடல்: வாகன உரிமையாளர்களுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் எச்சரிக்கை!

தமிழகம்

மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரங்கிமலை மெட்ரோ பார்க்கிங் டிசம்பர் 5 ஆம் தேதி வரை மூடப்படுகிறது என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் டிசம்பர் 5 ஆம் தேதி நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையை கடக்க உள்ளது. இந்த புயலானது சென்னையை நெருங்கி பின்னர் ஆந்திரா நோக்கி பயணிக்க உள்ளது. இதன் காரணமாக நாளை சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதி கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநில அரசு புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில் தொடர் மழை காரணமாக பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங் மூடப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொடர் மழையின் காரணமாக பரங்கிமலை மெட்ரோ இரயில் நிலையத்தில் வாகன நிறுத்தும் பகுதியில் மழைநீர் அதிகமாக தேங்கி உள்ள காரணத்தினால் வாகன நிறுத்துமிடம் டிசம்பர் 5 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி வரை தற்காலிகமாக மூடப்படுகிறது.

பரங்கிமலை மெட்ரோ இரயில் நிலையத்தில் வாகனங்களை நிறுத்தியுள்ள உரிமையாளர்கள் தங்களது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை உடனடியாக எடுத்து செல்லுமாறு சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துக்கொள்கிறது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து வாகன உரிமையாளர்கள் பரங்கிமலை மெட்ரோ இரயில் நிலையத்தில் இருந்து வாகனங்களை எடுத்து செல்லாத பட்சத்தில் வாகனத்திற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் பொறுப்பேற்காது.

தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக பரங்கிமலை மெட்ரோ இரயில் நிலைய வாகன நிறுத்தும் பகுதியில் அதிகமாக மழைநீர் தேங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள் பரங்கிமலை மெட்ரோ இரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையம் மற்றும் நங்கநல்லூர் மெட்ரோ இரயில் நிலைய வாகன நிறுத்தும் இடத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

தெலங்கானா காங்கிரஸ் வெற்றி: சத்தியமூர்த்தி பவனில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

தெலங்கானா: கேசிஆர், ரேவந்த் ரெட்டியை ஓவர்டேக் செய்த பாஜக வேட்பாளர்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *