சென்னையில் தனியார் பள்ளிகளுக்கு, மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால், தமிழகம் முழுதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அலர்ட் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள ஐந்து பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தைப் பற்றி விசாரணையில் இறங்கினோம்.
சென்னை அரண்மனைக்காரன் தெரு செயிண்ட் மேரிஸ் பள்ளிக்கு இன்று (பிப்ரவரி 8) காலை 10 மணிக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் மெயில் சென்றிருக்கிறது. தகவலை அறிந்து பதறிப் போன பள்ளி நிர்வாகம் காலை 11.45 மணிக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அடுத்த அரைமணி நேரத்தில் வெடிகுண்டு நிபுணர் குழு எஸ்.ஐ செல்வராஜ் தலைமையில் அப்பள்ளிக்கு சென்றனர் போலீஸார். அவர்கள் வருவதற்குள் பள்ளியில் படித்து வந்த 1,700 மாணவர்களை வெளியில் உள்ள மைதானத்தில் அமரவைத்தனர்.
அண்ணா நகர் மூன்றாவது அவென்யூவில் உள்ள பப்ளிக் ஸ்கூல் தனியார் பள்ளிக்கும் இன்று காலை 10 மணியளவில் இரண்டு சக்திவாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டதாக மெயில் வந்துள்ளது.
இந்த தகவலை பள்ளி நிர்வாகத்தினர் பதட்டத்துடன் அண்ணா நகர் காவல் நிலையத்தில் தெரிவித்தனர். உடனடியாக இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில், வெடிகுண்டு நிபுணர் எஸ்.ஐ.ரமேஷ் மற்றும் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் 11.30 மணியிலிருந்து சோதனை செய்து வருகின்றனர். இந்த பள்ளியில் தற்போது தேர்வு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதே நாளில்… மூன்றாவதாக ஜே.ஜே. நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டிவிஎஸ் அவென்யூ மெயின்ரோட்டில் அமைந்துள்ள சென்னை பப்ளிக் ஸ்கூலுக்கு jhonmay1.@protoon.me என்ற முகவரியில் இருந்து Mail@ChennaipublicSchool.com என்ற மெயிலுக்கு பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காலை 10.45 மணிக்கு மிரட்டல் வந்துள்ளது. உடனடியாக பள்ளி முதல்வர், திருமங்கலம் உதவி ஆணையர் வரதராஜனுக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக காலை 11 மணிக்கு பள்ளிக்குச் சென்ற ஆய்வாளர் நாஞ்சில் குமார், உதவி ஆய்வாளர் தேவசேனா ஆகியோருடன் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் விசாரணை செய்து வருகின்றனர்.
வெள்ளவேடு பகுதியில் திருமழிசையில் உள்ள சென்னை பபளிக் ஸ்கூல் gec@chennaipublicschool.com என்ற மெயில் ஐடிக்கு jhonmay1.@protoon.me என்ற மெயிலில் இருந்து காலை 10.15 மணிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இதனையடுத்து பள்ளி முதல்வர் சித்ராகலா வெள்ளவேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக காவல்துறையினர் வெடிகுண்டு நிபுணர்கள் தற்போது சோதனை செய்து வருகின்றனர்.
பட்டினப்பாக்கம் எம்ஆர்சி நகரில் உள்ள பிரபலமான செட்டிநாடு வித்யாஸ்ரமம் பள்ளிக்கும் jhonmay1.@protoon.me என்ற முகவரியில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் சென்றிருக்கிறது. தகவலை காவல் துறைக்கு தெரிவித்ததும், மயிலாப்பூர் ஏசி மற்றும் பாம் ஸ்குவாடு, ஆய்வாளர் முத்துமணி தலைமையில் இரண்டு மோப்ப நாய்கள் உதவியுடன் இன்ச் பை இன்ச் ஆக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்படி ஒரே நாளில் அடுத்தடுத்த நிமிடங்களில் ஐந்து பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக வந்த வெடிகுண்டு மிரட்டலால் சென்னையில் உள்ள மற்ற பள்ளிகள், மாநிலம் முழுதும் உள்ள பள்ளிகள் பதற்றத்தில் இருக்கின்றன.
இந்த ஐந்து பள்ளிகளுக்கும் வந்த மிரட்டல்களுக்கும் ஒன்றோடொன்று தொடர்புள்ளதா… அப்படியென்றால் மிரட்டல் விடுத்தது யார் என்பது பற்றி தீவிரமாக விசாரித்து வருகின்றனர் காவல்துறையினர்.
வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஒரு சீட் கேட்கும் மமக… திமுக பதில் என்ன?
நிதிப்பகிர்வில் ஓரவஞ்சனை: டெல்லியில் திமுக, கூட்டணி கட்சி எம்.பி-க்கள் ஆர்ப்பாட்டம்!