தமிழர்களாக நாம் ஒன்று சேர்வதற்கு நம்முடைய கலைகள் தான் இணைப்பு பாலமாக அமையும் என்று சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.
”சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா’ இன்று (ஜனவரி 13) சென்னை தீவுத்திடலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், நாட்டுப்புறப் பாடல்கள் போன்ற கலை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், “தமிழன் என்று ஒரு இனமுண்டு தனியே அவருக்கு ஒரு குணமுண்டு”
நாமக்கல் கவிஞர் ராமலிங்கனார் எழுதிய வரிகள் இது. இது வெறும் ஆரவாரம் காட்டக்கூடிய வரி மட்டுமல்ல. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆவணப்படுத்தப்பட்ட நமது பண்பாட்டுடைய இலக்கிய பெட்டகங்களை முன் நிறுத்தக்கூடிய ஒரு பெருமித முழக்கம் இது.
நெஞ்சை அள்ளக்கூடிய சிலப்பதிகாரம் முத்தமிழ் காப்பியம் என்று போற்றக்கூடிய அளவிற்கு இயல், இசை, நாடகம் எனப் பழந்தமிழ் நாட்டின் கலைமேன்மையை திட்டவட்டமாகத் தீட்டிக் காட்டி இருக்கிறது.
முத்தமிழறிஞர் கலைஞர் வரிசைப்படுத்திக் கூறுவார். நாடகம் தான் முதலில் தோன்றியது, பின்னர் இசை மற்றும் அதன் பின்னர் இயல் தோன்றியது என்று. கலைகள் என்பது வசதி படைத்த வர்க்கத்தின் பொழுதுபோக்கு அம்சம் என்று இருந்து நிலையை அடியோடு மாற்றி அவற்றை அடித்தட்டு மக்களிடத்தில் எடுத்துச் சென்ற இயக்கம் திராவிட இயக்கம் தான்.
திராவிட இயக்கம் தான் ஒரு சமுதாயத்தினை ஒரு தரப்பினருக்கான சாமர வீச்சால் அல்ல, சாதிகளின் பெயரால், சமயங்களின் பெயரால் சமத்துவத்திற்குச் சமாதிக் கட்ட நினைத்த போக்கிற்கு எதிரான சம்மட்டியாய், மூடப்பழக்கங்களுக்கு எதிரான முரசொலியாய் கலைகளை மாற்றியது.
திராவிட இயக்கம் தான் கலை வடிவம் மூலமாகச் சாமானிய மக்கள் வாழ்க்கையில் அனுபவித்த வலியைப் பேசியது. திராவிட இயக்கம் தான் சாமானிய மக்களின் மொழியில் பேசியது. திராவிட இயக்கம் கலைகளை வளர்த்தது. கலைகளால் வளர்ந்தது.
நாடகம், திரைப்படங்கள், கிராமிய கலைகள் அனைத்தையும் பயன்படுத்தி மக்களிடையே பரப்புரை செய்தோம். கலைகளின் வளர்ச்சிக்கும் கலைஞர்களின் வாழ்வின் வளர்ச்சிக்கும் கண்ணும் கருத்துமாய் கணக்கற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது திராவிட முன்னேற்றக் கழக அரசு.
இது கலைஞர் வழி நடக்கக்கூடிய அரசு. அதனால் தான் கலைஞர்களுக்கான அரசாகச் செயல்பட்டு வருகிறது. அதனால் தான் 2022-23 ஆண்டிற்கான நிதிநிலை கூட்டத்தொடரில் கலை பண்பாட்டுத் துறை வரலாற்றிலே இதுவரை இல்லாத அளவிற்கு 48 கோடி ரூபாய்க்கு மேலான நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
கலைஞர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்கி அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் கலைகளைப் போதிக்கக்கூடிய கல்விக் கூடங்களின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் கற்பித்தலின் தரத்தை உயர்த்த உதவக்கூடிய நவீன கருவிகளை வழங்கிடவும் தாராளமான நிதி செய்துள்ளது அரசு.
கலைகள் வளர வேண்டுமென்றால் கலைஞர்கள் வறுமையின்றி வாழணும். அதற்கு அவர்களுக்குக் கலை வாய்ப்புகள் வழங்கப்படணும். கொரோனா பெருந்தொற்றின் காரணமாக வாய்ப்புகள் இல்லாமல் வாடிக் கிடந்த கலைஞர்களுக்கு வான்மழையாய் ஏராளமான வாய்ப்புகளும் நலத்திட்டங்களும் அரசால் வழங்கப்படுகின்றன.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் கலைச் சங்கமம் என்ற பெயரில் 160 கலை நிகழ்ச்சிகள் நடத்த 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன.
500 நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு இசைக் கருவிகள், ஆடை, ஆபரணங்கள் வழங்குவதற்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க 50 லட்சம் ரூபாய் செய்யப்பட்டு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கலைமாமணி விருது பெற்ற வறிய நிலையில் வாழும் ஒவ்வொரு மூத்த கலைஞருக்கும் பொற்கிழியாக வழங்கப்படும் விருது தொகை 50 ஆயிரம் ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
திறமை மிக்க கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வழங்கப்படும் மாவட்ட கலைமாமணி எண்ணிக்கை 5-ல் இருந்து 15-ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பாகச் சென்னை மற்றும் 10 மாவட்டங்களில் பொங்கல் கலைத் திருவிழா நடத்த 50 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் வழங்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மூலம் அதிகமான கலைஞர்கள் பயன்பெறக் கூடிய வகையில், மன்றத்திற்கான நல்கை தொகை 3 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கெல்லாம் மகுடம் சூட்டுவதைப் போல நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் தமிழ்நாட்டின் தலைநகரமாக இருக்கக்கூடிய சென்னையிலும் கலை பண்பாட்டு மண்டலங்களின் தலைமையிடமாக இருக்கக்கூடிய காஞ்சிபுரம், திருச்சி, கோவை, சேலம், தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் கலை விழா நடத்த 9 கோடியே 84 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா என்ற பெயரிலே மிகப்பெரிய கலை கொண்டாட்டமாக நடக்கும் இந்த கலைவிழாக்கள் சென்னை மாநகரில் 18 இடங்களில் நடத்தப்பட இருக்கிறது. இந்த நிகழ்ச்சிகளில் நாட்டுப்புற கலைஞர்கள், செவ்வியல் கலைஞர்கள், பிறமாநில கலைஞர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.
40-க்கும் அதிகமான கலை வடிவங்களை உங்கள் கண் முன்னே நிகழ்த்தி உங்களையெல்லாம் மகிழ்விக்க இருக்கிறார்கள். இந்த விழாவில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் ஒவ்வொரு கலைஞருக்கும் இதுவரை வழங்கப்பட்ட ஒருநாள் மதிப்பூதியத்தை 2000 ரூபாயில் இருந்து 5000 ரூபாயாக உயர்த்தி வழங்கி இருக்கிறோம்.
சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவில் கண்ணுக்கு விருந்தான கலை விழாவோடு சென்னை மக்களின் நாவிற்கு உணவளிக்கும் உணவு திருவிழாவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
வேடிக்கை, நிகழ்ச்சிகளும், கவியரங்கம், கருத்தரங்கம் போன்ற இலக்கிய திருவிழாவும் நடக்க இருக்கிறது.
மக்கள் தனித்தனி தீவுகளாக தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். அந்த நிலை மாற வேண்டும். உண்மையான பொழுதுபோக்கு என்பது நம்முடைய கலைகள் தான். பொழுதுபோக்காக மட்டுமில்லாமல் நமது மனதைப் பண்படுத்துவதாகவும் அது அமைந்திருக்கிறது.
தமிழர்களாக நாம் ஒன்று சேர்வதற்கு நம்முடைய கலைகள் தான் இணைப்பு பாலமாக அமையும்” என்று பேசினார்.
மோனிஷா
‘துணிவு’ வெற்றி : சபரிமலையில் இயக்குநர் வினோத்
திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் தந்த பொங்கல் ஷாக்!