சென்னையில் பல்வேறு இடங்களிலும் இரவு முதல் இடைவிடாது மழை பெய்து வரும் நிலையில் திரு.வி.க.நகரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில் நேற்றுமுதல் சென்னை உட்படத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.
சென்னையைப் பொறுத்தவரை இடைவிடாது மழை பெய்து வரும் நிலையில், நேற்று காலை 08.30மணி முதல் இன்று காலை 09.00மணி வரை அதிகபட்சமாக கத்திவாக்கம், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, திரு.வி.க. நகர் பகுதிகளில் தலா 16செ.மீ மழைப் பதிவாகியுள்ளது.
சென்னையில் சராசரியாக 8.5செ.மீ மழைப் பதிவாகியுள்ளது.
இரவு மழை கொட்டித் தீர்த்த நிலையில், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், சிந்தாதிரிப்பேட்டை, அசோக் நகர், ஆளுநர் மாளிகை உள்ளிட்ட,
7இடங்களில் சாலைகளில் மரங்கள் சாய்ந்தன. அவற்றை உடனடியாக தீயணைப்புத் துறையினர் அப்புறப்படுத்தினர்.
அதுபோன்று, இவ்வளவு மழை பெய்தும் பல்வேறு பகுதியிலும் தேங்கிய மழை நீர் உடனே வடிந்துவிட்டதாகச் சென்னை மாநகராட்சி, தனது சமூகவலைதள பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளது. கே.கே.நகர், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
ஜோன்ஸ் ரோடு சுரங்கப்பாதை, வில்லிவாக்கம் சுரங்கப்பாதை, கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை, மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை ஆகிய சுரங்கப்பாதைகளில் கடந்த காலங்களைப் போல் தண்ணீர் தேங்கவில்லை என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
எனினும் தண்டையார்பேட்டை வ.உ.சிநகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தாழ்வான பகுதிகளில் இருக்கும் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்கள் வாளி மூலம் நீரை அகற்றி வருகின்றனர்.
புதுவண்ணாரப்பேட்டையில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
திரு.வி.க.நகரில், நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக வீட்டின் சன்ஷேட் (மழை, வெயில் உள்ளே வராமல் இருக்க சிமெண்டால் போடப்பட்ட கூரை) இடிந்து விழுந்ததில் காய்கறி வியாபாரி சாந்தி உயிரிழந்தார்.
பிரியா
”இன்னைக்கு கனமழை பெய்யும்- வீட்டுக்குள் பத்திரமா இருங்க”: வெதர்மேன்!
மழை பாதிப்புகளை தெரிவிக்க புகார் எண்கள்: சென்னை மாநகராட்சி ஏற்பாடு!