பத்திரிகையாளர்களிடம் சட்டத்திற்கு விரோதமாக செல்போன்களை பறிமுதல் செய்துள்ள சிறப்பு புலனாய்வுக் குழுவின் நடவடிக்கைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது. chennai press club condemns sit
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியை, ஞானசேகரன் என்ற நபர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு, எஃப்.ஐ.ஆர் லீக் ஆனதன் அடிப்படையில் பத்திரிகையாளர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது விசாரணைக்காக ஆஜரான பத்திரிகையாளர்களின் செல்போனை பறிமுதல் செய்தது சர்ச்சையானது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பாக தலைவர் சுரேஷ் வேதநாயகம் மற்றும் பொதுச்செயலாளர் அசீப் தலைமையில் நேற்று (பிப்ரவரி 1) மாலை 4 மணியளவில், மன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளர்களை அச்சுறுத்துவதை நிறுத்து, பறிமுதல் செய்த செல்போன்களை உடனே திருப்பிக் கொடு என்ற பதாகைகளை ஏந்தியபடி நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பத்திரிகையாளர்கள் குற்றவாளிகளா? chennai press club condemns sit
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அசீப் பேசுகையில், “அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு பத்திரிகையாளர்களுக்கு தேவையற்ற நெருக்கடி அளித்து வருகின்றனர்.
சட்ட விதிமுறைகளுக்கு மாறாக வாட்ஸ் அப் வழியாக சம்மன் அனுப்பப்பட்டது. எனினும் பாதிக்கப்பட்ட மாணவியை கருத்தில் கொண்டு ஆஜரான பத்திரிகையாளர்களிடம், காது கூசும் கேள்விகளை கேட்டுள்ளனர்.
‘உங்களுக்கு எத்தனை மனைவிகள், மனைவியின் சொத்து விவரம் என்ன? எவ்வளவு காசுக்கு எஃப்.ஐ.ஆர் விற்றீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்கள். அவர்களின் செல்போனையும் பறிமுதல் செய்தனர்.
பத்திரிகையாளர்கள் என்ன குற்றவாளிகளா? எஃப்.ஐ.ஆர் தரவேற்றம் செய்தது தான் தவறு. தரவிறக்கம் செய்தது குற்றமல்ல. செய்தி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக தான் அதை பத்திரிகையாளர்கள் பார்க்கிறார்கள். சிறப்பு புலனாய்வுக் குழுவின் இந்த நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது.
எந்தவித ஆதாரமும் இல்லாமல், உத்தரவாதமும் கொடுக்காமல் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை பத்திரிகையாளர்களிடம் திருப்பி கொடுக்க வேண்டும்” என்றார் அசீப்.
ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் கருப்பு பேட்ச் அணிந்து பங்கேற்றனர்.