தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மாநகரத்தில் காற்று மாசுபாடு மற்றும் பட்டாசு கழிவுகள் அதிகரித்துள்ளது.
நகரில் சேகரமான பட்டாசு குப்பைகளை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் காலை முதல் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் நேற்று இரவிலிருந்தே குப்பைகளை அகற்றி வருகின்றனர்.
பட்டாசு அட்டைகள், காகிதங்கள், பிளாஸ்டிக் பைகள் போன்றவற்றை தனித்தனியாக சேகரித்து வருகின்றனர். பட்டாசு குப்பையில் வேதி சேர்மங்கள் இருப்பதால் தனியாக பிரித்தெடுக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தீபாவளி பட்டாசு குப்பைகள் 500 டன்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பட்டாசு குப்பைகளை கும்மிடிப்பூண்டியில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசின் திடக்கழிவு மேலாண்மை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இந்த குப்பைகள் மறுசுழற்சி செய்யப்பட இருப்பதாகவும், அதற்காக 300-க்கும் மேற்பட்ட வாகனங்களில் குப்பைகள் கொண்டு செல்லப்பட உள்ளதாகவும் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் காற்று மாசுபாடு அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகரித்துள்ளது. இரவு 7 மணி முதல் 8 மணி வரை, ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருந்த நிலையில் மக்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்துள்ளனர்.

பெருங்குடி – 252, ராயபுரம் -205, மணலி -201, ஆலந்தூர் – 191, எண்ணூர் – 171 காற்று மாசுபாடு பதிவாகி உள்ளது.
சென்னை கோயம்பேடு, நுங்கம்பாக்கம், எழும்பூர், அண்ணா நகர், மயிலாப்பூர், மந்தைவெளி, சென்ட்ரல், சேப்பாக்கம், பாரிமுனை உள்ளிட்ட பல பகுதிகளிலும் பட்டாசு வெடித்ததால் நகர் முழுவதும் புகை மண்டலமானது.
செல்வம்