சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் உலகக் கோப்பை போட்டிக்கான லீக் போட்டி பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே இன்று (அக்டோபர் 23)நடைபெற்று வருகிறது.
போட்டி மதியம் 2 மணிக்கு தொடங்கப்பட்ட நிலையில், காலை முதலே ரசிகர்கள் வரத் தொடங்கினர். ஆங்காங்க கண்காணிப்பு பணியிலும் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
மதியம் 12 மணி அளவில் ரசிகர்கள் மைதானத்திற்கு வெளியே குவிந்திருந்த போது, ரசிகர் ஒருவர் கையில் வைத்திருந்த தேசியக் கொடியை பிடிங்கி போலீஸ் ஒருவர் குப்பைத் தொட்டியில் போட முயன்றார்.
இதை பார்த்த அங்கிருந்த ரசிகர்கள், “தேசியக் கொடியை குப்பை தொட்டியில் போடுறீங்க” என்று கத்திய நிலையில், சுதாரித்துக்கொண்ட அதிகாரி குப்பை தொட்டிக்குள் போடாமல் எடுத்து வந்து போலீஸ் ஜீப்பில் வைத்துகொண்டார்.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தேசிய கொடி விவகாரம் என்பதால் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியளவில் இதுதொடர்பான வீடியோ பரவியது.
இதுகுறித்து ஏபிவிபி அமைப்பு, “மூவர்ணக் கொடியை அவமதித்த போலீஸ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த சம்பவம் கடந்த காலத்தில் பாகிஸ்தானில் நமது வீரர்களுக்கு நடந்தவற்றை நினைவுப்படுத்துகிறது.
நமது மண்ணில் இதுபோன்ற செயல்களை பார்ப்பது வருத்தமளிக்கிறது. இதற்கு திமுக அரசு பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தது.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “திமுக அமைச்சர் பொன்முடியின் மகனும் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் தலைவருமான அசோக் சிகாமணி அரசியல் பிரச்சாரத்தை ஒரு படி மேலே கொண்டு போய் நமது தேசத்தின் கொடியை அவமதித்துள்ளார்.
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
சேப்பாக்கத்தில் இன்றைய போட்டிக்கு இந்தியக் கொடியை ஏந்தியபடி ரசிகர்களை மைதானத்திற்குள் போலீசார் அனுமதிக்கவில்லை. அனுமதி மறுப்பதற்கான உரிமையை தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷனுக்கு யார் கொடுத்தது.
தேசியக் கொடியை அவமதித்த காவல்துறை அதிகாரிமீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், தேசியக் கொடியை குப்பை தொட்டியில் போட்ட செம்பியம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நாகராஜனை, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி சென்னை காவல் ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
பிரியா
அஜித் வீட்டின் சுவரை இடித்த அரசு: காரணம் என்ன?
சாம்சங் அறிமுகப்படுத்தும் ‘Galaxy tab A9′!
சர்வதேச திரைப்பட விழாவில் வெற்றிமாறனின் விடுதலை!