தவறான சிகிச்சை: 10 வயது மகளுடன் காவலர் தர்ணா போராட்டம்!

தமிழகம்

சென்னை அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் கால் பாதிக்கப்பட்ட தனது 10 வயது மகளுடன் நீதி கேட்டு காவலர் ஒருவர் இன்று (ஏப்ரல் 13) தலைமை செயலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருபவர் கோதண்டபாணி. இவருக்கு 10 வயதில் பிரதிஷா என்ற ஒரு மகள் உள்ளார்.

சிறுநீரக பிரச்சினை காரணமாக தனது 3 வயது முதல் சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் சிறுமி.

அங்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகளை கடந்த 5 வருடங்களாக பிரதிஷா உட்கொண்டு வந்த நிலையில், பக்கவிளைவு காரணமாக அவளது வலது கால் பாதத்தில் கடுமையான அரிப்பு ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சிறுமி பிரதிஷா மீண்டும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிறுமி அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு தவறான சிகிச்சை அளித்ததன் காரணமாக சிறுமியின் பாதம் கருகியதுடன் உடலில் உள்ள இரத்தம் கெட்டுப்போனதாக கூறப்படுகிறது.

chennai police protest tn secretariat against govt doctors

மேலும் கோதண்டபாணியின் அனுமதியின்றி டயாலிசிஸ் செய்யப்பட்டதன் காரணமாக சிறுமி பிரதிஷாவுக்கு வலிப்பு ஏற்பட்டு கோமா நிலைக்கும் தள்ளப்பட்டார்.

இந்நிலையில் அலட்சியத்துடன் மூன்று முறை தனது மகளுக்கு தவறான சிகிச்சை அளித்த அரசு மருத்துவமனை மருத்துவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் காவலர் கோதண்டபாணி தனது பாதிக்கப்பட்ட மகளுடன் தகிக்கும் வெயிலில் தலைமை செயலகம் முன்பாக இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனையடுத்து அங்கிருந்த காவலர்கள் அவரை சமாதானப்படுத்தி அங்கிருந்து அழைத்துச் செல்ல முயன்றனர்.

அதற்கு மறுப்பு தெரிவித்த கோதண்டபாணி, “என் பொண்ணு காலுக்கு இந்த அரசாங்கம் பதில் சொல்லட்டும்.

நான் நியாயத்துக்காக போராடுகிறேன். எனக்கு நிவாரணம் வேண்டாம்.

அலட்சியமாக சிகிச்சையளித்த மருத்துவர்கள் மீது வழக்குபதிவு செய்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.” என்றார்.

மேலும் அவர் அங்கு வந்த உயரதிகாரியிடம், “இதுகுறித்து மருத்துவமனையிலும், தலைமை செயலகத்திலும் மனு அளித்து, நடந்து வரும் நல்லாட்சிக்காகவே நியாயம் கிடைக்கும் என்று கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காத்திருந்தேன்.

ஆனால் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுக்கப்புறம் ஒரு போலீஸ்காரனா நான் என்னதான் பண்ணுவேன்.” என்று வேதனையுடன் பேசினார் கோதண்டபாணி.

இதனைடுத்து அவரிடம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்து அங்கிருந்து கோதண்டபாணியை அழைத்துச் சென்றனர்.

எனினும் காவலர் ஒருவரே தனக்கு நீதிகேட்டு தலைமைச் செயலகம் முன்பு 10 வயது குழந்தையுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கிறிஸ்டோபர் ஜெமா

டிஜிட்டல் திண்ணை: சட்டமன்றத்தில் வேலுமணிக்கு புது பதவி?

தமிழக வீரர்கள் இல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ்… ஐபிஎல் தொடரில் இருந்து நீக்கப்படுமா?

+1
0
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *