சென்னையில் இந்த ஆண்டு உயிரிழப்பில்லா புத்தாண்டு கொண்டாட்டம் என்பதே நோக்கம் என்று காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.
புத்தாண்டு கொண்டாட்டத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, அன்பு மற்றும் கபில்குமார் சரத்கர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய காவல் ஆணையர், “புத்தாண்டு கொண்டாட்டங்களை ஆளில்லா விமானம் மூலம் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்களில் மக்கள் அதிகம் கூடுவர் என்பதால் பாதுகாப்பு போடப்படும்.
இரவு 7 மணியில் இருந்து காமராஜர் சாலை முதல் கலங்கரை விளக்கம் வரை வாகனங்களுக்கு அனுமதியில்லை. பைக் ரேஸ் தொடர்பாக தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை 368 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஹோட்டல் கொண்டாட்டங்கள் பொறுத்தவரையில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இரவு 1 மணிக்கு மேல் கொண்டாட்டங்களை நடத்தக் கூடாது.
80 % சதவீதம் இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கவேண்டும். மது விருந்து இருக்கும் இடத்தில் 18 வயது கீழ் உள்ளவர்களை அனுமதிக்க கூடாது. மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டக்கூடாது. QR code கொடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் uber app இணைக்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி மது அருந்தியவர்கள் செல்லவேண்டும். நீச்சல் குளம் பக்கம் எந்த நிகழ்ச்சிகளையும் நடத்தக் கூடாது; பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
புத்தாண்டு கொண்டாட்டத்தில் போதைப்பொருள் வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு சீல் வைக்கப்படும்.
கடற்கரைகளில் தற்காலிக கட்டுப்பாட்டு அறை, கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படும். 16,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கின்றனர். மரணமில்லா புத்தாண்டு என்பதே நோக்கம் என்று சங்கர் ஜிவால் கூறினார்.
கலை.ரா