சென்னையில் இன்று (ஆகஸ்ட் 13) ரவுடி ரோகித் ராஜை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.
சென்னை டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த ரவுடி ரோகித் ராஜ் மீது மூன்று கொலை வழக்குகள் உள்பட 13 வழக்குகள் உள்ளது.
மயிலாப்பூர் சிவக்குமார், பைனான்சியர் ஆறுமுகம், பிபிசி ஆறுமுகம் உள்ளிட்ட மூன்று பேர் கொலை வழக்கில் இவருக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரோகித்ராஜ் தொடர்ந்து பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.
இந்தநிலையில், ரோகித் ராஜ் தேனியில் பதுங்கி இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து தேனி விரைந்த போலீசார், ரோகித் ராஜை ஆகஸ்ட் 10-ஆம் தேதி கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.
இன்று காலை சென்னை சேத்துப்பட்டில் கொலை நடந்த இடத்திற்கு ரோகித் ராஜை அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது அவர் போலீசாரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்றதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து தற்காப்பிற்காக போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ரோகித் ராஜ் காலில் குண்டு பாய்ந்ததாகவும், உடனடியாக அவர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி திருவேங்கடத்தை போலீசார் என்கவுன்டர் செய்த நிலையில், இன்று தப்பியோட முயன்ற ரவுடி ரோகித் ராஜை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
புதிய பழனி மாவட்டம்: முருகனிடமும் முதல்வரிடமும் மக்கள் கோரிக்கை!
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியா? – ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்!